H
Home

ஷீஆவின் தோற்றம் எப்போது?

ஷீஆ இஸ்லாத்தில் புதிதாக தோன்றிய ஒரு மத்ஹப் என்று கருதும் சிலரே மேலுள்ள வினாவை எழுப்புவர். வரலாற்றை யதார்த்த கண் கொண்டு பார்க்கும் போதே இவர்களின் ஷீஆவைப் பற்றிய யூகம் தெளிவாகும். எப்போது தோற்றம் பெற்றது என்ற கேள்வியை ஷீயாவை வைத்துக் கேட்காமல் உண்மை யிலேயே இஸ்லாத்தில் புதிதாக தோன்றிய அமைப்புக்களை வைத்து வினவுவது சாலச் சிறந்ததாக இருக்கும்.

கவாரிஜ், முர்ஜிஆ போன்றவைகள் அரசியல் கொந்தளிப்புகளாலும், கொள்கை கோட்பாடுகளாலும் உருவானவைகள் இவைகளை நோக்கி மேலுள்ள வினா எழுவது நியாயம்தான். மாறாக ஷீயாவை அவ்வாறு வினவுவது சரியல்ல ஏனெனில் ஷீயா இஸ்லாத்தில் புதிதாக தோற்றம் பெற்ற ஒரு அமைப்பு அல்ல. மாறாக ஷீயாவும் சுன்னி போன்று இஸ்லாத்தின் வேரொரு முகமாகும் நன்றாக கூறின் இஸ்லாத்தை ஒரு இரும்பு நாணயமாக கருதினால் அதன் ஒரு பக்கம் சுன்னாவென்றும் மறுபக்கத்தை ஷீயாவென்றும் கருதலாம்.

ஷீயாவின் உண்மை வடிவத்தை கூறுவதாயின் பின்வறுமாறு கூறலாம்.

ஷீயா என்பது நபி (ஸல்) அவர்களினால் கொண்டு வரப்பட்ட தெளிவான இஸ்லாம், அவர்களின் கண் மறைவிற்குப் பின்னும் அதன் ஒளி மங்கி மறையக்கூடாது என்பதற்காக அவர்கள் தன்னிகர் போன்ற ஒரு தலைமைத்துவத்தை இஸ்லாத்தை பாதுகாக்க உருவாக்கினார்கள் என்பதை ஆதார பூர்வமாக ஏற்று அத்தலைமைத்துவத்தின் நிழலில் வாழும் ஒரு இஸ்லாமிய சமூகம்.

ஷீயா என்பது, இஸ்லாத்தை தனது வழியாகக் கொண்டு அதற்கு புத்துயிர் கொடுத்து கியாமத் நாள் வரைக்கும் பாதுகாக்க நாயகத்தால் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு இமாம் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதாக நம்பிக்கை வைத்துள்ள ஒரு இஸ்லாமிய சமூகம். இன்னும் கூறுவதானால் நாயகத்தின் இஸ்லாம் இறுதி நாள் வரை பாதுகாக்கப்படுமா? என்று அஞ்சும் பட்சத்தில் நாயகம் எம் பயத்தை நீக்கி தனது இஸ்லாமிய பாதுகாவலர்கள் என்று குறிப்பிட்ட சிலரை நியமித்துத் தந்த இஸ்லாத்தை பாதுகாக் கும் திட்டத்தை முன்காட்டி நிற்பவர்கள் தான் ஷீஆக்கள்.

நாயகம் ஸல் அவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் அவர்களின் கண்மறைவுக்குப் பின்னும் அதே தூய வடி வத்தில் பாதுகாக்கப்படவேண்டும். அது எஞ்சி இருக்க வேண்டும். என்று குரல் கொடுக்கும் பட்சத்தில் அங்கு தோள் கொடுத்து உதவி செய்ய வருபவர்கள் தான் ஷீயாக்கள்.

மேற்கூறப்பட்ட வரைவிலக்கணத்திற்கமைய ஷீயா மத்ஹபின் கோட்பாடு என்னவெனில் இஸ்லாத்தின் இறுதிநாள் வரையான முடிவற்ற வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்க நாயகம் போன்ற தலைவர்கள், வழி காட்டிகள் தோன்ற வேண்டும் என்றும் அத்தலைவர்கள் வழிகாட்டிகள் நாயகம் மூலம் தெரிவு செய்யப் பட்டு விட்டனர் என்றும் கருதுகின்றனர்.

இதனால் ஷீஆவை இஸ்லாத்தின் அமுலாக்கப் பிரிவு என்றும் அதனை பின்பற்றுவோரை ஷீயாக்கள் என்றும் கூறுகின்றோம்.

எனவே ஷீஆவை புதிதாக இஸ்லாத்தில் உதித்த பிரிவு என்று கருதுவதை விட்டுவிட்டு இஸ்லாத்தை இருதிநாள் வரை பாதுகாத்து கரைசேர்க்க அமைக்கப்பட்ட திட்டம் என்பதே சாலச் சிறந்தது.

இவை யாவையும்  நாம் அல்குர்ஆன் அல்ஹதீஸ்களில் தெளிவாக காண்கின்றோம்! ஷீயாக்கள் தன் கூற்றுக்கு ஆதாரமாக குர்ஆனின் சூரதுல் மாயிதாவின் 67,69 வது வசனங்களை முன்வைக்கின்றனர். இவ்வசனங்கள் நாயகத்திற்குப் பின் இஸ்லாத்தை பாதுகாக்க தோன்றும் வழிகாட்டிகளைக் கூறுகின்றது இவ்வாதத்திற்கு பக்க பலமாக அவைகள் இறங்கிய காரணங்களை ஹதீஸ் கிரந்தங்களில் காட்டுகின்ற னர்.  அதே போன்று சூரதுன் நிஸாவின் 59 வது வசனத்தையும் நாயகத்திற்குப் பின் நபிகளாரின் சமுகத்திற்குரிய பொறுப்பதிகாரிகள் என்று அறிமுகம் செய்கின்றனர்.

நபிகளாரின் அருள் வாக்குகளிலும் ஷீஆவுக்கு ஆதாரமுள்ளதென கூறும் அவர்கள் பின் வருமாறு கூறுகின்றனர்.  நாயகம் ஸல் அவர்கள் தனது ஆரம்ப பிரச்சாரத்திலிருந்தே தனக்குப் பின் வரும் இமாமை, வழி காட்டியை, கலீபாவைத் தெரிவு செய்து விட்டார்கள். இக் கூற்றுக்கு தஃவதுல் அஷீரா, அல்லது ஹதீது யவ்முத்தார், அல்லது பத்வுத் தஃவா போன்றவைகளை ஆதாரமாக காண்பிக்கின்றனர்.

மேற் கண்ட ஹதீஸ் விடயம் எக்காலத்தைச் சாறுமென்றால் நபி மணி (ஸல்) அவர்கள் தனது இனபந் துக்களை அழைத்து இஸ்லாத்தை எற்றி வைக்க இறைவன் பாலிருந்து கட்டளை பெற்றுக் கொண்டார் களோ அன்றிலிருந்தே தனக்குப் பின்னுள்ள வழிகாட்டியை தெரிவு செய்து விட்டார்கள்.

இறை ஏவலின்  பேரில் நாயகத்தின் அழைப்பினால் இனபந்துக்கள் ஒன்று கூட்டப்பட்ட அந்நாளில்  கோமான் நபி தனது இனபந்துக்களை நோக்கி உங்களில் எவர் என்னுடைய இஸ்லாத்தை ஏற்று அதை ஏனையோருக்கு எற்றி வைக்கும் பணியில் எனக்கு துணையாக இருந்து உதவி செய்கின்றாரோ அவரே எனக்குப் பின் முஸ்லிம் உம்மத்திற்கு தலைவராகுவார் என்று இயம்பிய  போது மௌனத்தில் சங்கமித் திருந்த  சபையோருக்கு  மத்தியில்  ஹஸரத்  அலி (அலை) வீரத்துடன் எழுந்து நின்று தனது ஆதரவை நாயகத்திற்கு வழங்கி உதவியும், ஒத்தாசையும் புரிவதாக கூறினார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸரத் அலியின் ஆதரவு கொண்ட துணை விவகாரத்தை ஏற்று, ஏய் அலி! நீரே எனக்குப் பின் எனது கலீபா, வஸி, வலி என்று அறிமுகம் செய்தார்கள்.

ஆதாரம்

01-  தாரீகுத் தபரி பாக-2 பக்- 216

02-  தப்ஸீருத் தபரி பாக-9  பக்- 74

03-  காமில் இப்னு அதீர் பாக-2  பக்- 24

04-  ஸீரதுல் ஹலபீ பாக- 1  பக்- 221

05-  ஹயாது முஹம்மத் (ஸல்) - ஹுஸைன் ஹெய்கல் - எகிப்து

06-  கன்ஸுல் உம்மால் பாக-6  பக்- 91

07-  அல் கஷ்பு வல் பயான்; , தஃலபி

கதீர் கும் என்ற மிக முக்கியமான ஒரு நிகழ்வும் ஹஸரத் அலியின் இன்னு மொரு இமாமத் நியமண நாளாகும். நாயகத்தின் ஹஜ்ஜத்துல் விதாவில் கலந்து கொண்டு தங்களது நாடுகளை நோக்கி திரும்பி க் கொண்டிருந்த ஆயிரக் கணக்கான ஹஜ்ஜாஜிகளை கதீர் கும் என்ற இடத்தில் வர வழைத்து ஒன்று கூட்டி பாலை வனத்தின் உச்ச உஷ்ணத்திற்கு மத்தியில் ஹஸரத் அலியை உலக முஸ்லிம்களுக்கே அறிமுகம் செய்து, அவர்களிடமிருந்து வாக்குறுதிகளைப் பெற்று தனக்குப் பின் அலி தான் உங்களுக்கு வழிகாட்டும் இமாம் என்றும், அவர் தான் எனக்குப் பின் முஸ்லிம் உம்மத்திற்கு கலீபா என்றும் அலியின் கையை உயர்த்தி சுட்டிக்காட்டினார்கள். இத்தினத்தில் தான் சூரத்துல் மாயிதாவின் 67-69 வரையிலான  வசனங்கள்  நபிகளாருக்கு இறக்கப் பட்டது. அவ்வசனங்களில் முதல், நபிகளாரை எச்சரித்து மனிதர் களின் தீங்கிக்காக அஞ்சி ரிஸாலத்தை பூர்த்தி செய்யாமலிருக்க வேண்டாம் என்று கூறி விட்டு நபிகளா ரை அனுதாபித்து, ஆதரித்து மனிதர்களின் தீங்கிலிருந்து உம்மைப் பாதுகாப்போம் என வாக்குறுதி வழ ங்கினான். உடனே நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வித தாமதமுமின்றி அலியினுடைய விலாயத்தை, இமா மத்தை மக்களுக்கு எற்றி வைத்து விட்டு தான் இஸ்லாத்தை பூரணப்படுத்தி விட்ட தாகவும், இறைவனி ன் அருட் கொடைகள் எமக்கு குறைவின்றி கிடைத்து விட்டதெனவும் கூறினார்கள். ( ஆதாரம்: தப்ஸீர் பக்ரு ராஸி  சூரதுல் மாயிதா, மபாதீகுல் கெய்ப் பாக- 12  பக்- 27, 28)

இம்மாபெரும் நிகழ்வுகளில் நாயகத்தின் கட்டளைக்கு அடிபணிந்து நாயகத்திற்குப் பின் அலியை தங்க ளது இமாமாக ஏற்றுக் கொண்டவர்களைத் தான் ஷீஆக்கள் என்றழைக்கின்றோம். மேற்கூறப் பட்ட  நிகழ்வுகள் ஷீஆவின் தோற்றத்திற்கு போதுமான ஆதாரங்களாகும்.

ஷீஆ என்ற சொல் எவ்வாறு தோற்றம் பெற்றது ?  என்று சிலர் வினவலாம். இச் சொல்லை நாயகமே இயம்பி இருக்கையில் நமக்கேன் விவாதம்!! ஷீஆ என்ற வார்த்தையை தனக்குப் பின் அலியைப் பின் பற்றும் முஸ்லிம் உம்மத்திற்கு நாயகம் சூட்டிருப்பது ஆதார பூர்வமான ஒரு விடயம் என்பதால் எவராலும் அதை மறுக்க முடியாது.இவ்விஷயத்தை ஷீஆ,சுன்னி சார்ந்த ஹதீஸ், தப்ஸீர், வiலாற்றுக் கிரந்தங்க ளில் தாராளமாக காணலாம்.

உதாரணத்திற்கு . ;- 01-

ان االذين آمنوا  وعملوا  الصالحات  اولئكهم  خير البريه  : سوره البينه

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு சாலிஹான நல்லமல்கள் செய்கின்றார்களோ அவர்கள் தாம் படைப்புக்களில் மிக மேலானவர்கள். 98-7

என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு பல முபஸ்ஸிரீன்கள், குர்ஆன் விரிவுரையாளர்கள் பின்வருமாறு வியாக் கியாணம் வழங்கியுள்ளனர்:-

இவ்வசனம் அலியின் விடயத்திலும் அலியைப் பற்றும் அலியின் ஷீஆக்களின் விடயத்தில் தான் இறங்கியது. ஏனெனில் மேற்கூறிய வசனம் நபிகளாருக்கு இறங்கிய போது படைப்புக்களில் எல்லாம் மிக சிறந்த படைப்பு யார் என சஹாபாக்கள் வினவ நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கு அலியும், அலியுடைய ஷீஆக்களும் என்று பதிலுரைத்தார்கள்.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தையும் அதற்குறிய நபிவாக்கையும் சுயூதி என்ற அஹ்லுஸ் சுன்னத் குர்ஆன் விரிவுரையாளர் தனது துர்ருல் மன்தூர் என்ற ஏட்டிலும்,  இப்னு அஸாகிர் என்பவர் தனது வரலாற்று ஏட்டிலும் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) வாயிலாக நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) கூறுகின்றார்கள்:- நாங்கள் சபையில் அமர்ந்திருக்கும் வேளையில் அலி சபையை நோக்கி வந்து கொண்டிருந்தார் நபிளாரின் பார்வை அவரின் மேல் விழவே பின்வருமாறு கூறி னார்கள்.

والذي نفسي  بيده  ان هذا  وشيعته  لهم  الفائزون  يوم القيامه 

என் ஆத்மா எவன் வசமுள்ளதோ அவன் மீது சத்தியமாக இவரும், இவரைப் பின்பற்றுபவர்களும் நாளை மறுமையில் ஜெயம் பெறுவர், வெற்றியாளர்கள் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள்,

ان الذين  آمنوا  وعملوا  الصالحات اولئكهم  خير  البريه 

என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அச்சம்பவத்தின் பின் அலி சபைக்கு வரும் போதெல்லாம் சபை யோர் அலியை جاء خير  البريه   , சிறந்த சிருஷ்டி வருகிறார் என கூறினார்கள். (ஆதாரம்- துர்ருல் மன்தூர் பாக-6  பக்-379)

மேற்கூறப்பட்ட சம்பவத்தை இப்னு அப்பாஸ், அபூ பர்ஸா, இப்னு மர்தவீஹ், அதிய்யா அவ்பி போன்ற ஹதீஸ் அறிவிப்பாளர்களும் பல இடங்களில் அறிவித்துள்ளார்கள்  (ரிஸாலதுல் குர்ஆன் பாக-9  பக்-259)

 

நாயகத்தின் பொன் நாவினால்  ஷீஆ என்று அருளப்பட்ட ஹதீதுகள் -

 02- ஹைதமி என்ற சுன்னி அறிஞர் தனது மஜ்மவுஸ் ஸவாயித் என்ற கிரந்தத்தில் பின் வரும்

ஹதீதை பதிவு செய்துள்ளார்.

قال رسول الله  (ص)  لعلي :  انت  وشيعتك  تردون  علي  الحوض  تردون رواه مروين  ومبيضه وجوهكم  وان عدوك  يردون  علي  الحوض  ظما  مقمحين  

நாயகம் (ஸல்) ஹஸரத் அலியை நோக்கி, ஏய் அலி நீரும் உமது ஷீஆக்களும் மறுமையில் என்னை நோக்கி ஹவ்ழுல் கவ்தர் வரை வருவீர்கள் அந் நேரத்தில் உங்கள் முகங்கள் ஒளியினால் இலங்கிக் கொண்டிருக்கும், நீங்கள் தாகம் தீர்ந்தவராகவும் இருப்பீர்கள். ஆனால் உமது  எதிரிகள் கவலையுற்ற வர்களாகவும், கடும் தாகமுடையவர்களாகவும் வருவார்கள் எனகூறினார்கள் )  .ஆதாரம்:-மஜ்மவுஸ் ஸலாயித் பாக-9  பக்-131)

03- அபூ ஸயீதுல் குத்ரி ரழி, உம்மு ஸல்மா ரழி வாயிலாக அறிவிப்பதாவது நாயகம் (ஸல்) அவர்கள் அலியை

நோக்கி,

  انت  واصحابك  فى  الجنه  وانت  وشيعتك  فى  الجنه 

ஏய் அலி நீயும் உமது தோழர்களும், நீயும் உமது ஷீஆக்களும் சுவனத்திலிருப்பீர்கள் என அருளினார்கள்.ஆதாரம்:- தாரீகு பக்தாத் பக்-358 ,  ஸவாயிகுல் முஹ்ரிகா பக்-161> மஜ்மவுஸ் ஸவாயித் பாக-10 , பக்-21)

04- இப்னு அதி, தகபி போன்ற இரு சுன்னி அறிஞர்கள் தங்களது நூல்களில் நாயகம்(ஸல்) அவர்கள் அலியை  நோக்கி கூறிய நபிவாக்குகளை அறித்துள்ளார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் அலியை நோக்கி,

اما انك  يا ابن ابي طا لب وشيعتك  فى ا لجنه

ஏய் அலி அறிந்து கொள் நிச்சயமாக நீயும் உமது ஷீஆக்களும் சுவனத்திலிருப்பீர்கள். (ஆதாரம்:- மீஸானுல் இஃதிதால் பாக-2, பக்-18 , அல் காமிலிப்னு அதீ பாக-3 , பக்-950-951)

05- அபூபக்ர் பின் மர்தவீஹ், அபூ ஹுரைரா மூலம் அறிவிப்பதாவது, நாயகம் (ஸல்) அவர்கள் அலியை

நோக்கி,

....  انت معي  وشيعتك  فى  ا لجنه 

ஏய் அலி நீயும் உனது ஷீஆக்களும் என்னோடு சுவனத்திலிருப்பீர்கள் என்று கூறி விட்டு,

... اخوانا على  سرر  متقابلين 

சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முகம் நோக்கி சுவன கட்டில்களில் இருப்பார்கள். என்று கூறிவிட்டு

மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.  (15:47) என்ற வசனத்தை ஓதினார்கள்.  (ஆதாரம்:-  கஸ்புல் கும்மா பாக-1  பக்-325)

06- ஜாபிருப்னு அப்தில்லாஹ் ரழி அறிவிப்பதாவது, பெருமான் நபி (ஸல்) அவர்கள் அலியை நோக்கி

وان  شيعتك على  منابر  من نور مبيضه  وجوهكم حولي  اشفع  لهم  ويكونون  غدا  فى  الجنه جيـرانى

ஏய் அலி நிச்சயமாக உனது ஷீஆக்கள் மறுமையில் ஒளி கொண்ட முக ங்களோடு என்னை சுற்றி வளைத்து போடப்பட்டுள்ள மிம்பர்களில் இருப்பார்கள். நான் அவர்களுக்கு ஷபாஅத்துச் செய்வேன். அத்தோடு அவர்கள் எனது அயல் வீட்டாராகவும் சுவனத்தில் இருப்பர்.  ( ஆதாரம்:- கன்சுல் கராஜிகி பாக-2  பக்-179,கிபாயத்துத் தாலிப் பக்-265 )

07- அமாலி எனும் நூலில் ஹஸரத் அலி நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஒரு நபிமொழியை  ஸனானி என்பவர் அறிவிக்கின்றார்

நாயகம் (ஸல்) அவர்கள் அலியை நோக்கி ஏய் அலி நீ எனது வஸீயும், கலீபாவும், வாரிசும், எனது பிள்ளைகளின் தந்தையுமாவீர். உனது ஷீஆக்களும், நண்பர்ளும் என்னைச் சார்ந்தோரே உன்னைப் பகைப்போரும், உனது எதிரிகளும் எனது எதிரிகளே! ஆம் எவர்கள் உன்னைப் பின்பற்றுகின்றார்களோ நிச்சயமாக அவர்கள் ஜெயம் பெருவர். இன்னும் எவர்கள் உன்னைப் பகைக்கின்றார்களோ அவர்கள் ஜெயம் பெருபவர்களல்லர். சந்தேகமின்றி உனது விலாயத்தின் மூலமும் உன்மீது நேசம் கொள்வதாலும் மலக்குமார்கள்  இறைவனுக்கு  பிரியமானவர்களாக ஆகின்றனர். எனவே இறைவன் மீது ஆணையாக  உன்னை நேசிப்போர் பூமியை விட வானத்திலே அதிகமாக உள்ளனர் என அருளினார்கள். ( ஆதாரம்:- ஆமாலி)

08- ஹாபிழ் ஜமாலுத்தீன் ஸரந்தீ இப்னு அப்பாஸ் வாயிலாக அறிவிப்பதாவது,

اولئكهم  خير  البريه

என்ற வசனம் இறங்கிய போது நாயகம் ஸல் அவர்கள் அலியை நேக்கி,

هـو  انت  وشيعتـك  يوم القيامه  راضيين مرضيين

சிறந்த சிருஷ்டி நீயும் உமது ஷீஆக்களுமேயாகும். முறுமையில் நீரும் உமது ஷீஆக்களும் இறைவன் உங்களோடு திருப்தியுற்ற நிலையிலும், நீங்கள் இறைவனில் திருப்தியுற்ற நிலையிலும் வருவீர்கள் என்றார்கள்.

ஆதாரம்:

ஸவாயிகுல் முஹ்ரிகா பக்-161

நூருல் அப்சார் ஸப்லன்ஜி பக்-159

தப்ஸீருத் தபரி பாக-30 பக்-171

தாரீகு இப்னு அஸாகீர் பாக-2  பக்-852

துர்ருல் மன்தூர் சுயூதி பாக-6 பக்-389

பத்குல் கதீர்  ஷெளகானி பாக-5 பக்-477

ரூஹுல் மஆனி ஆலூஸி பாக-30 பக்-207

யனாபீஉல் மவத்தா பக்-74

09-  இப்னு அப்பாஸ்(ரழி) தனது வரலாற்று ஏட்டில் பின்வரும் ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் அலியை நோக்கி ஏய் அலி முதன் முதலில் சுவனம் நுழையும் நால்வரில்

நானும் நீயம் ஹஸனும் ஹுஸைனுமுள்ளோம் அதன் பின் எமது இனபந்துக்களும், மனைவிமார்

களும் ஷீயாக்களும் சுவனம் நுழைவர். எமது ஷீயாக்கள் எமது வலது இடது பக்கங்களில் வந்து

அமர்ந்து கொள்வர் என்றார்கள். (ஆதாரம்:- தாரீகுல் இப்னு அஸாகிர் 2-329 மஜ்மஉதஸ்ஸவாயித் 9-131

ஸவாயிகுல் முஹ்ரிதா பக் 161)

10- முஸ்தத்ரகுல் ஹாகிம் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் வந்துள்ளதாவது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் ஆளப்பாய்ந்த வேர் கொண்டு ஓங்கி உயர்ந்த ஒரு மரமா

வேன், அலியும் பாத்திமாவும் அதன் பெரிய சிரிய கந்துகளும், கிளைகளுமாவர், ஹஸனும் ஹுஸை

னும் அதன் பழக்கனிகளாகவும், ஷீயாக்கள் அதன் கிளைகளுமாக உள்ளனர். என்று இயம்பினார்கள்.

ஆதாரம்:- முஸ்தத்ரகுல் ஹாகிம் பாக-3 பக்-160 , ஃபுஸுனுல் முஹிம்மா பக்-27

ஷீஆ அல்லாதவர்கள் புரிந்து கொள்ளட்டும் நாங்கள் அலியின் ஷீஆக்களாக வாழ்கின்றோம் என்றால் அது நாயகத்தின் மாற்ற முடியாத கட்டளைக்கு அடிபணிந்தே நாங்கள் ஷீஅவைப் பின்பற்றுகின்றோம். அதாவது நாங்கள் ஆதார பூர்வ வழியில் தான் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளட்டும் அலியையும், அலியின் பிள்ளை(கள் இமாம்களாக தோன்றிய) களையும் பின்பற்றுகின்றோம் என்றால் அப்படி செய்யும் படி நாயகம் (ஸல்) கூறியதற்காகவே செய்கின்றோம் என்பதை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். அவர்களும் நாயகத்தின் கட்டளைக்கு அடி பணிந்து வாழ விரும்பினால் ஷீஆ அவர்களுக்கு சிறந்த வழியாகும். மறுமையில் ஜெயம் பெரும் எண்ணம் யாருக்கேனும் இருந்தால் அவர் நாயகத்தின் அருள் வாக்குகளுக்கு பூரணமாக அடிபணியட்டும். நாயகமே ஜெயம் பெறும் பாதையை அஹ்லுல் பைத்தினரின் பாதை என்றும் ஷீஆவாக வாழுங்கள் என்றும் கூறியுள்ளார்களே! சத்திய பாதையில் வாழும் யதார்த்த அஹ்லுஸ் சுன்னத் யாரெனில் நாயகத்தின் அருள் வாக்குகளுக் கு முற்றாக அடிபணிபவர் தான் மாறாக தன்னை அஹ்லுஸ் சுன்னத் என்று சொல்லிக் கொண்டு சுன்னாவை ஏற்று நடக்காமலிருப்பவரல்ல!

எனவே ஷீஆ என்ற பெயர் நபிகளார் மூலம் அவர்களது காலத்திலே நாயகத்திற்கு பின் அலியோடு தொடர்பு வைத்துக் கொள்பவர்களுக்கு சூட்டப் பட்டுள்ளது. மாறாக பின் வந்த கலீபாக்கள் காலத்திலோ அல்லது ஆங்காங்கே ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்களிலே சூட்டப் பட்ட பெயரல்ல!

நாங்கள் மற்ற இஸ்லாமிய மத்ஹபுகளுக்கு சங்கை செய்து கண்ணியப் படுத்தி அவர்களோடு ஒரு வரிசையில் தொழுகின்றோம், ஒருமித்த காலத்திலும் குறிப்பிட்ட இடத்திலும் அவர்களோடு புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றுகின்றோம். இஸ்லாத்தின் இறுதி நோக்கத்தை அடைய எல்லோரோடும் ஒத்துழைக்கின்றோம். அதே நேரத்தில் நாயகத்திற்குப் பின் அலியோடு வாழ்ந்தவர்கள் விஷேசமான வர்கள், நபிகளாரின் தனிக் கவனிப்புக்குள்ளாகி இருந்தவர்கள் என்று நம்புகின்றோம். இதனாலேதான் ஷீஆவை எங்களின் வாழ்கை வழியாக தேர்ந்தெடுத்துள்ளோம். ஏனெனில் நாயகமே எங்களுக்கு ஷீஆவை காட்டித் தந்துள்ளார்கள்.

துரதிஷ்டவசமாக ஷீஆவோடு பகைமையும், குரோதமும் கொண்ட தீயவர்கள் ஷீஆவின் ஸ்தாபகர் அப்துல்லாஹ் இப்னு ஸபா என்றும் ஷீஆக்களை அப்துல்லாஹ் இப்னு ஸபாவை பின்பற்றுபவர்கள் என்றும் தூற்றுகின்றனர். இவர்கள் யதார்த்த கண் கொண்டும், பிடிவாதம், கொள்கை வெறியற்று ஷீஆவை பார்ப்பார்களானால் ஷீஆவுக்கும் அப்துல்லாஹ் இப்னு ஸபாவுக்கும் எவ்வித தொர்புமில்லை என்பதையும், ஷீஆ உலமாக்களின் கருத்தில் அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற ஒருவன் இருந்ததி ல்லை எனக் கூறுவதையும் காணலாம்.

சுருங்க கூறின்.-

ஷீஆ என்ற சமூகம் அரசியல் தாக்கங்களினாலோ அல்லது கொள்கை விவாத கொந்தளிப்பினாலோ பெற்றெடுக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக அன்று நபிகளாரின் சமுகத்தில் வாழ்ந்த முதல் முஸ்லீம்களான அன்சாரிகளிலும் முஹாஜிரீன்களிலும் ஒருவகுப்பினர் நாயகத்தின் கட்டளையின் பேரில் அலியை நாயகத்திற்குப் பின் தங்களது இமாமாக ஏற்று அலியின் கட்டளைக்கு செவிதாழ்த்தி வாழ்ந்தார்கள் அதுதான் ஷீயாவின் தோற்றம் அவர்களின் கருத்தில். நாயகம்(ஸல்) அவர்கள் தனது இறைவனின் கட்டளைப்படி இஸ்லாம் என்ற ஜோதி இறுதிநாள் வரை பாதுகாக்கப்படுவதற்கு அலியையும் அலிக்குபின் பதினொரு(11) இமாம்களையும் தனது கலீபாக்களாகவும் தன் சமுகத்தின் இமாம்களாகவும் மக்களுக்கு அறிமுகம் செய்து அவர்களைத் தேர்தெடுக்கும் பொறுப்பை மக்கள் கையில் கொடுத்து மக்களை குழப்ப நிலையில் ஆக்கி விடாமல் தாங்களே தெரிவு செய்துவிட்டு சென்றுள்ளார்கள் என்று நம்புகின்றனர்.

இதனாலே தான் ஷீயாக்கள் தங்களது இஸ்லாமிய மார்க்க சட்டங்களையும், தங்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான சகல அறிவியல் விடயங்களையும் அலியிடத்திலிருந்தும் பின்வந்த பதினொரு (11) இமாம்களிடத்திலிருந்தும் பெருகின்றனா. ஏனெனில் நாயகமே அலியைப்பற்றி அருளும் போது.நான் அறிவின் பட்டணம் அலி அதன் நுழைவாயில் என்று கூறியுள்ளார்கள். இதனால் ஏனையோர்கள் கொடுக்கும் பத்வாக்கள் ஆதாரமற்றவை என்கின்றனர்.

இவ்வாக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதில் போன்று தெளிவான நபிவாக்குகள் இருந்தும் ஷீயாவை ஒரு சிறிய விடயமாகவோ அல்லது ஒரு யுகமாகவோ கருதுவது மகா தவறு! நபிகளாரின் தெட்டத் தெளிவான ஹதீஸ்களை எவ்வாறு மறுக்க முடியும்! நாயகம் தனக்குப்பின் அஹ்லுல்பைத்தைப் பின்பற்ற செல்லி இருக்கையில் ஏன் சிலர் அஹ்லுல்பைத்தல்லாதவர்களின் பக்கம் சென்று அவர்களைப் பின்பற்றுகின்றனர்.

ஷீயாக்கள் அஹ்லுல்பைத்தையல்லாது வேறு எவரைப்பின்பற்றுகின்றனர்? உண்மை அஹ்லுல் பைத்தோடு இருக்கையில் ஏன் எவருக்கும் பின்னால் நாம் போகவேண்டும்? இணையத்தின் கட்டுரைப் பகுதியில் அஹ்லுல்பைத் சம்பந்தமாக நபிகளாரின் அருள் வாக்குகளை முஸ்லிம் மற்றும் ஏனைய ஐந்து கிரந்தங்களிலுமிருந்து எடுத்துக்காட்டியுள்ளோம். நாயகம் (ஸல்) அவர்கள் தனக்குப்பின் இரு பொக்கிஷங்களான குர்ஆனையும், அஹ்லுல்பைத்தையும் பின்பற்றும்படி வேண்டியுள்ளார்கள். அஹ்லுல் பைத் என்போர் அலியும், பாத்திமாவும், அலியின் பிள்ளைகளுமாவர்.ஷீயாக்கள் அலியைப் பின்பற்றுகின் றார்கள் என்றால் அது நாயகத்தின் கட்டளையின் பேரிலேதான் இப்படி ஆதார பூர்வமாக அலியைப் பின் பற்றும் ஷீயாக்களை ஏன் சிலர் வசைபடித்திருக்கின்றார்கள்?

ஆம் அன்று பனீ உமையாக்கள் அஹ்லுல்பைத்துக்களோடு பகைமை கொண்டிருக்காவிட்டால் இன்றுள்ள வசைகளும் ஊத்தைப்பேச்சுகளும் இருக்க மாட்டாது இன்று சிலர் ஷீயாவை தூற்றுகின்றார்க லென்றால் அன்றைய தனது தாய் தந்தையர்களான பனீ உமையாக்களின் வாழ்க்கை வழி முறைகளை ஹயாத்தாக்குகின்றார் எவ்வித யமில்லை!