அனைத்துலகையும் படைத்தவன் அல்லாஹ் ஆவான். உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அல்லாஹ்வின் அறிவுக்கும் வல்லமைக்குமான சான்று களாக விளங்குகின்றன. மனிதனின் அகவய-புறவய அம்சங்கள், உயிரினங்கள், வித்துகள், புற்பூண்டுகள், நட்சத்திரங்கள் முதலிய அனைத்து அம்சங்களிலும் அல்லாஹ்வின் வல்லமையும் இருப்பும் ஊர்ஜித மாகின்றன. பிரபஞ்ச சிருஷ்டிகளின் ஆழ அகலங்கள் பற்றி அதிகமாக சிந்தனை செய்வதன் மூலமாக இறைவனது மகிமை, சக்தி, அறிவு நுட்பம் முதலானவற்றை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
மனிதனது அறிவும் சிந்தனையும் அதிகரிக்கின்ற போது, அல்லாஹ்வினது அறிவு, நுட்பம் மற்றும் வல்லமை பற்றிய புதிய சான்றுகள் மனிதர்களுக்குக் கிடைக்கின்றன. சிந்தனை விருத்தியும் ஏற்படுகின்றது. இச்சிந்தனையே, மனிதர்கள் தினந்தோறும் அல்லாஹ்வை நேசிப்பதற்கு முக்கிய காரணமாக அமைவதுடன், அவனளவிலான நெருக்கத்திற்கு வழிவகுக்கும் சிறப்பம்ச மாகவும் அமைகின்றது.
அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது
''முஃமின்களுக்கு பூமியில் அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளேயும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?| (51:20,21(
''நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப் பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், தங்களின் விலாப்புறங்களின் மீது சாய்ந்த வண்ணமும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்கள் மற்றும் பூமியின் படைப்புகளைப் பற்றியும் சிந்தித்து, 'எங்கள் இரட்சகனே! நீ இவைகளை வீணாகப் படைத்து விடவில்லை| எனவும் கூறுவார்கள்.||(3:190,191(
அல்லாஹ், அனைத்து விதமான குறைபாடுகளை விட்டும் தூய்மையானவனாவான். அவன் பரிபூரணமானவன். உலகில் காணப்படும் எல்லாவிதமான சிறப்புகளும் பண்புகளும் அவனிடமிருந்தே உருவாகியிருக்கின்றன.
''அல்லாஹ் எத்தகையவனென்றால், அவனைத் தவிர, வணக்கத்திற்குரிய வேறு நாயன் இல்லை. அவன் தான் உண்மையான பேரரசன். பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், அபயமளிப்பவன், கண்காணிப்பவன், யாவரையும் மிகைத்தவன், அடக்கியாளுபவன், பெருமைக்குரியவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். அவன், அல்லாஹ், படைப்பவன். அவனே படைப்புகளை ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன். அவனே படைப்பினங்களின் உருவத்தை அமைப்பவன். அவனுக்கு அழகான பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவனே யாவரையும் மிகைத்தோனும் தீர்க்கமான அறிவுடையோனுமாவான்.'(59: 23,24(
அல்லாஹ் சகல விடயங்களிலும் வரையறைக்கு உட்படாதவனாக இருக்கின்றான். அவனது அறிவு, சக்தி, வாழ்வு அனைத்துமே முடிவற்றவையாகும். இதன் காரணமாக இடம், காலம் போன்ற வரையறைகளுக்கு உட்படாத பண்பு ள்ளவனாக அல்லாஹ் இருக்கின்றான். ஏனெனில், இடம் காலம் எதுவாக இருப்பினும் அவற்றுக்கு வரையறை இருக்கின்றது. ஆனால், அல்லாஹ்வோ எல்லா காலதேச வர்த்தமானங்களையும் கடந்தவனாகவும் அவற்றை மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.
''வானத்திலும் அவனே வணக்கத்திற்குரிய நாயன்;;;. பூமியிலும் அவனே வணக்கத்திற்குரிய நாயன். அவனே தீர்க்கமான அறிவுடையவன், யாவற்றை யும் மிகைத்தவன்.||(43:84(
''நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடன் இருக்கின்றான். மேலும், அல்லாஹ் நீங்கள் செய்ப வற்றை நன்கு பார்க்கின்றவன். (57:04(
வாஸ்தவத்தில் இறைவன் நமக்கு நம்மை விடவும் மிக நெருக்கமாக இருக்கின்றான். அனைத்து இடங்களிலும் அவன் வியயாபித்து இருக்கின்றான். ஆனால், எந்நிலையிலும் அவனுக்கென்று பிரத்தியேக இடமொன்று கிடையாது.
''மேலும், நாம் உயிர் நரம்பை விட அவனுக்கு மிக சமீபமாக இருக்கின்றோம்.|| (50:16(
''முதலாமவனும் கடைசியானவனும் அவனே. அந்தரங்க மானவனும், வெளிப்படையானவனும் அவனே. மேலும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவன்.|| (57:03(
குர்ஆனின் சில வசனங்களில், அவன் அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன்.||''ரஹ்மான் அர்ஷின்'' மீது நிலைகொண்டான்||முதலான கருத்துகள் தொனிக்கின்றன. அரபு மொழியில் அர்ஷ் எனும் பதம் சிம்மாசனத்தைக் குறிக்கவும் பயன்படுகின்றது. ஆயினும், இவ்வசனங்கள் அல்லாஹ் வுக்கு ஒரு பிரத்தியேக இடத்தை அடையாளப் படுத்துவதாகவோ, ஒரு சிம்மாசனத்தை அவனுக்கான இருப்பிடமாக இனங்காட்டுவதாகவோ இல்லை. முழுப் பிரபஞ்சத்தின் மீதும் அதற்கு அப்பாற்பட்ட ஆத்மீக உலகங்கள் மீதும் வியாபித்திருக்கும் இறையாட்சியையே அவை குறிக்கின்றன. ஏனெனில், அல்லாஹ்வுக்கு இடம் உண்டென்று கூறும்போது, அவனும் வரையறைக்கு உட்பட்டவனாக மாறிவிடும் நிலை ஏற்படுகின்றது. இடம் எனும் வரையறைக்குள் குறுகி விடுவது படைப்பினங்களின் பண்பாகும். படைப்பாளனோ படைப்பினங்களை ஒத்தவனாக இல்லை.
அதேவேளை,''அவனைப் போன்று ஒன்றுமில்லை(42:11),அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை(112:4) போன்ற வசனங்கள், அல்லாஹ்வின் ஒப்புவமையற்ற உயர் நிலையை சுட்டுவனவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அல்லாஹ்வை கண்களால் காண முடியாது என்பது எமது நம்பிக்கையாகும். ஏனெனில், ஒரு பொருளை கண்களால் காண முடியுமாக இருப்ப தென்பது, குறித்த பொருளுக்கு உருவம், இடம், நிறம், தோற்றம், திசை முதலான பண்புகளை அடையாளப் படுத்தும் சான்றாக அமைகின்றது. இவை சிருஷ்டிகளின் பண்புகளாகும்;. ஆனால் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் பண்புகளோ, அவனது படைப்புகளின் பண்புகளை விட்டும் முற்றிலும் வேறுபட்டனவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தனவுமாகும்.
இதன்படி, அல்லாஹ்வைக் கண்களால் காண முடியும் என்று நம்புதலானது இணைவைப்பில் (ஷிர்க்) எம்மைச் சேர்த்து விடும் அபாயம் கொண்டது.
பார்வைகள் அவனை அடையாது. அவனே பார்வைகளை அடைகின்றான். அவன் நுட்பமானவன். யாவற்றையும் நன்கறிந்தவன். (06:103(
பனூ இஸ்ராயீல்களில் சிலர் நபி மூஸாவிடம் வந்து, ''மூஸாவே! நாம் இறைவனைக் கண்ணால் காண்கின்ற வரை, உம்மை விசுவாசங் கொள்ள மாட்டோம்|(2:55) என்று தர்க்கம் புரிந்தார்கள். மூஸா நபியவர்கள் அக்குழுவினரை அழைத்துக் கொண்டு தூர்சீனா மலைக்குச் சென்று அவர்களது வேண்டுகோள் பற்றி அல்லாஹ்விடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்விடமிருந்து பதில் வந்தது
மூஸாவே! ஒரு போதும் நீர் என்னைப் பார்க்க முடியாது. எனினும் இம்மலையை நீர் பார்ப்பீராக. அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்.||
அதன்படி அவர்களது இரட்சகன் அம்மலை மீது வெளிப்பட்ட போது, அது அம்மலையை தூள்தூளாக்கி விட்டது. மூஸாவும் திடுக்கிட்டு மூர்ச்சையாகி விழுந்து விட்டார். பின்னர், அவர் தெளிவுபெற்று எழுந்த போது, அல்லாஹ்விடம் 'நீ மிகப் பரிசுத்தமானவன். நான் உன்னிடம் பாவ மன்னிப்புக் கோருகின்றேன். இன்னும் நான் முஃமின்களில் முதன்மையானவன்|என்றும் கூறினார். (07:143-9(
அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்ற இவ்வரலாற்று நிகழ்வு, மனிதர்கள் அல்லாஹ்வைக் காண்பதென்பது சாத்தியமற்றது என்பதற்கு சிறந்த சான்றாகும். சில அல்குர்ஆன் வசனங்களிலும், ஹதீஸ்களிலும் அல்லாஹ்வைக் காண முடியும் என்ற கருத்தை தொனிக்கும் கூற்றுகள் காணப்படினும், அவை அகக் கண்களால் அல்லாஹ்வை அடைய முடியும் என்பதையே சுட்டுவதாக அமைந்துள்ளன என்பது தெளிவு. ஏனெனில், குர்ஆன் வசனங்கள் எப்போதும் ஒன்றையொன்று முரண்பட்டு நிற்பதில்லை. மாறாக ஒன்றை மற்றொன்று விளக்குவதாகவே அமைகின்றது
ஹஸ்ரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து ஒரு மனிதர், ''அமீருல் முஃமினீனே! எப்போதாவது தங்களது இறைவனைக் கண்டதுண்டா?|| என வினவியபோது, ''காணாத ஒருவனை வணங்குவேனா?||எனக் கூறிவிட்டுச் சொன்னார்கள்: ''ஒருபோதும் கண்கள் அவனை வெளியோட்டமாக காணமாட்டாது. ஆனால், உள்ளங்கள், ஈமானின் யதார்த்தத் தன்மையால் அவனைக் கண்டுகொள்கின்றன.|| (நஹ்ஜுல் பலாகா - குத்பா – 179(
மனிதர்களின் பண்புகளை அல்லாஹ்வில் கற்பனை செய்வதும் இடம், காலம், திசை, உருவம் போன்றவற்றை அல்லாஹ்வுடைய இயல்புகளென நம்புவதும் அல்லாஹ்வை அறிவதிலிருந்து தூரமாவதற்கும் ஷிர்க்கினால் அழுக்காவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே, அல்லாஹ் மனிதர்களுடைய பண்புகளை விட உயர்ந்தவனும் பரிசுத்தமானவனும் மட்டுமன்றி தன் சகல விடயங்களிலும் ஒப்புவமை யற்றவனாகவும் இருக்கி ன்றான்.
தவ்ஹீத் எனும் ஏகத்துவம் பற்றிய அறிவு, அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் விடயத்தில் மிக முக்கிய மான அம்சமாகும். தவ்ஹீத், மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்று எனக் கருதுவதை விட அதுவே அனைத்து மார்க்கக் கோட்பாடுகளினதும் மூல உயிராக இருக்கின்றது என்றால் மிகையாகாது.
இஸ்லாமிய அடிப்படைகளும் அதனையொட்டிய பிரிவுகளும் தவ்ஹீதிலிருந்து தான் தோற்றம் பெறுகின்றன. அல்லாஹ் ஒருவன், நபிமார்களின் அழைப்பு (தஃவா) ஒன்று, இறைமார்க்கம் ஒன்று, கிப்லா ஒன்று, இறைவேதம் ஒன்று, அனைத்து மனிதர்களுக்கும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் ஒன்று, முஸ்லிம்களின் அணி ஒன்று, இறுதியில் மீளும்; மறுமை நாளும் ஒன்றே என இந்த ஒருமை எங்கும் விரவிக் காணப்படுகின்றது.
இதனாலேயே, ஏகத்துவத்திலிருந்து ஷிர்க்கை நோக்கிச் செல்வதை மன்னிக்க முடியாத பாவமென இஸ்லாம் கருதுகின்றது.
''நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர மற்ற எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ, அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்து விட்டார்.|| (04:48(
''நீர் இணை வைத்தால், நிச்சயமாக உமது செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக, நீர் நஷ்ட வாளிகளில் ஆகிவிடுவீரென உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் வஹீ மூலம் அறிவிக்கப ;பட்டது.|| (39: 65(
எமது நம்பிக்கைகளின் பிரகாரம், ஏகத்துவம், பல கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் பின்வருவன முக்கியமானவையாகும்.
1.தவ்ஹீத் தாத்
இறைவன் தனித்தவன். அவனுக்கு இணையாகவோ, நிகராகவோ எதுவும் கிடையாத மூலவன் என்று நம்பிக்கை கொள்வது.
2.தவ்ஹீத் சிபாத் (பண்புகள்(
அறிவு, சக்தி, வல்லமை, நிரந்தரம் முதலிய பண்புகள் அனைத்தும் அல்லாஹ்வினது தாத் எனப்படும் மூலவியல்பில் உள்ளவையாகும். மேலும் அவனது பண்புகள் படைப்பினங் களின் பண்புகளைப்; போன்று காணப்படுவதில்லை. ஏனெனில், படைப்பினங்களுடைய பண்புகள் ஒவ்வொன்றும் அவற்றின் அடிப்படை மூலத்தில் இருந்து வேறுபட்ட இயல்பும் பல்லினத்; தன்மையும் கொண்டவையாகும். அல்லாஹ்வின் பண்புகள் அவனது தாத்தில் உள்ளவை என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஆழ்ந்த சிந்தனை தேவைப்படுகின்றது.
3.தவ்ஹீத் அஃப்ஆல் (செயல்கள்(
அல்லாஹ்வின் நாட்டத்திலிருந்தே உலகின் ஒவ்வொரு அசைவும், செயலும் உருவாகின்றது.
''அல்லாஹ்வே ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன். அவனே ஒவ்வொரு பொருளின் மீது பொறுப்பாளன்.(39: 62(
''வானங்கள் மற்றும் பூமியினது (பொக்கி'ங்களின்) சாவிகள் அவனுக்கே உரியவையாகும்.|(42: 12(
எனவே தான், ''அல்லாஹ்வைத் தவிர, பிரபஞ்ச வெளிப்பாடுகளில் தாக்கமேற்படுத்தும் எந்தவொரு காரணியும் கிடையாது||என்று கூறப்படுகின்றது. இதனை வைத்து, மனிதர்கள் தமது செயற்பாடுகளில் சுதந்திரமற்றவர்கள் என்று பொருள் கொள்ளப்படக் கூடாது. மாறாக, மனிதர்கள் தாமாகவே தீர்மானித்து செயற்படுவதில் சுதந்திரமானவர்களாக இருக்கின்றனர்.
''நிச்சயமாக, நாம் மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டியுள்ளோம். அதைப் பின்பற்றி அவன் ஒன்று- நன்றியுள்ளவனாக இருக்கலாம். அல்லது அதைப் பின்பற்றாது நன்றி மறந்தவனாக இருக்கலாம்.' (76: 03(
''மனிதனுக்கு அவனாகவே முயற்சி செய்வதைத் தவிர வேறொன்றுமில்லை.|(53: 39(
இவ்வசனங்கள் மனிதன் சுதந்திரமான நாட்டமுடையவன் என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், குறித்த செயலை செய்வதற்கான சக்தியையும் சுதந்திர நாட்டத்தையும் அல்லாஹ்வே மனிதர்களுக்கு வழங்குகின்றான். அந்த விதத்தில் மனிதர்கள் அல்லாஹ்வோடு தொடர்பு படுகின்ற போதிலும், மனிதர்களது செயல்கள் பற்றிய அவர்களது பொறுப்பு அதன் மூலம் குறைந்து விடுவதில்லை.
உண்மையில் மனிதர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அல்லாஹ் நாடியுள்ளான். அதன் மூலம், அவன் மனிதர்களைப் பரிசோதிக்கின்றான். அத்துடன் பரிபூரணத்துக்கும் இட்டுச் செல்கின்றான். ஏனெனில் தீர்மானிக்கும் சுதந்திரம் மற்றும் அல்லாஹ்வை அடிபணிவதற்கு சுயவிருப்பத்தின் படி முன்வருதல் என்பவற்றின் மூலமே மனிதர்களது பரிபூரணத் தன்மை ஊற்றெடுக்கின்றது. ஏனெனில், சுதந்திரமற்ற நிலையில் விதிக்கப்பட்ட செயல்கள், மனிதர்களுடைய நல்ல அல்லது கெட்ட பண்புகளை பிரதிபலிப்பனவாக இருக்க முடியாது.
மனிதர்கள் தமது செயல்களில் சுதந்திர மற்றவர்களாகக் காணப்படுவார் களாயின், நபிமார்களின் வருகைக்கோ இறைவேதங்கள், மார்க்க அழைப்புகள், அதன் வழிகாட்டல்கள் என்பவற்றுக்கோ எவ்வித அர்த்தமும் இருந்திருக்காது. அதேபோல நன்மை, தீமைகளுக்கு அல்லாஹ்வே கூலி வழங்குவதும் கூட அர்த்தமற்றதாகவே அமைந்திருக்கும்.
இதே விடயங்களைத் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுடைய அஹ்லுல் பைத்தினரிலிருந்து தோன்றிய பரிசுத்த இமாம்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள முடிகின்றது. அவர்களது கூற்றின் பிரகாரம்:
''முழுக்க விதியை நம்புவதோ, அல்லது பரிபூரண சுதந்திரமோ சரியானதன்று. உண்மை, அவ்விரண்டுக்கும் மத்திமமானதாகும்.||
4.தவ்ஹீத் இபாதத் (வணக்க வழிபாடுகளில் தவ்ஹீத்(
இபாதத் எனப்படும் வணக்க வழிபாடு அல்லாஹ்வுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டியதாகும். அவனைத் தவிர, வணங்கி வழிபடத் தகுதியான நாயன் யாருமில்லை. இது, ஏகத்துவத்தின் அதி முக்கிய அம்சமாகும். நபிமார்களும் விசேடமாக இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.
''அவர்கள் இறைவனை மாத்திரமே வணங்க வேண்டும், அவனுக்காக மார்க்கத்தை தூய்மைப்படுத்த வேண்டும், இணை வைப்பதிலிருந்து ஏகத்துவத்தின் பால் திரும்ப வேண்டும், தொழுகைகையும் கடைப் பிடித்து ஸக்காத்தும் கொடுத்து வர வேண்டும் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் ஏவப்பட வில்லை. இன்னும் இது தான் நேரான மார்க்கமாகும்.||(98: 05(
ஆத்ம ஞானம் (இர்பான்), ஒழுக்கவியல் (அக்லாக்) போன்ற துறைகளில் உச்சநிலை அடைவதற்கான படிகளைத் தாண்டுவதற்கு, கண்டிப்பாக தவ்ஹீத் மிக ஆழமாகப் பேணப் படல் வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறெதனையும் அன்பு கொள்ளாத, எல்லா இடங்களிலும் அவனை மட்டுமே வேண்டுகின்ற, அவனைத் தவிர வேறெதனைப் பற்றியும் சிந்திக்காத, அல்லாஹ்வுக்காகவன்றி வேறெதற்காகவும் செயற் படாத தன்மை ஆகியன இதில் அடங்கும். இதனைத்தான்: ''உன்னை ஈர்த்தெடுக்கும் அல்லாஹ் அல்லாத எதுவும் நீ வணங்கும் சிலையாகக் கருதப்படுகின்றது|| என்று கூறுவதுண்டு.
நமது நம்பிக்கையின் படி, தவ்ஹீத் என்பது, இந்நான்கு கிளைகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. பின்வருவனவும் அதில் அடங்குகின்றன.
5.தவ்ஹீத் மாலிகிய்யத்
அதாவது எல்லா சிருஷ்டிகளும் அல்லாஹ் வுக்குச் சொந்தமானவை என்று நம்புவது.
''வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியவையாகும்.(02:284(
6.தவ்ஹீத் ஹாகிமிய்யத்
அதாவது சட்டவாக்க அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியதாகும் என்பது.
''மேலும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ, அத்தகை யோர் தாம் காபிர்கள்.' (05: 44(
நபிமார்கள் செய்யும் வழமைக்கு மாறான பிரமாண்டமான செயல்களனைத்தும் அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரமே இடம்பெறுகின்றன என்பதை செயல் கள் (அஃப்ஆல்) பற்றிய ஏகத்துவம் உறுதிப்படுத்துகின்றது. அல்குர்ஆன் நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றது:
எனது உத்தரவைக் கொண்டு வெண்குஷ்டம் மற்றும் கருங்குஷ்டத்தைச் சுகப்படுத்தியதையும் மரணித்தோரை எழுப்பியதையும் நினைவு கூர்வீராக.|| (05:110(
மேலும் நபி சுலைமான் (அலை) அவர்களுடைய அமைச்சர்களில் ஒருவரைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
''வேதத்திலிருந்து அறிவை தன்னிடம் கொண்டிருந்தவரான ஒருவர், கண் இமைப்பதற்குள் அதனை நான் உம்மிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறினார். அது தன் முன் நிலைபெற்றிருப்பதை அவர் (சுலைமான்) கண்ட போது, இது எனது இரட்சகனின் பேரருளில் உள்ளதாகும் எனக் கூறினார்.|| (27:40(
எனவே, குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தியதும் மரணித்தவர்களை உயிர்ப்பித்ததும் ஈஸா நபியவர்களுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டாலும் உண்மை யில் அவை அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரமே நிகழ்ந் தவையாகும். மேற்போந்தவற்றின் மீதான நம்பிக்கை ஏகத்து வத்தின் அடிப்படை களுக்கு முரணானது அல்ல என்பது எமது நம்பிக்கையாகும்.
மலக்குகள் பற்றியும், அவர்களது பிரத்தியேகக் கடமைகள் பற்றியுமான விசுவாசம், மார்க்க நம்பிக்கையில் முக்கியமான ஒன்றாகும். மலக்குகளில் சிலர், நபிமார்களுக்கு வஹி அறிவிப்பாளர்களாக இருந்தார்கள்.(1:97) மற்றும் சிலர், மனிதர்களின் செயல்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும் (82:10) மேலும் சிலர், உயிர்களைக் கைப்பற்றும் பொறுப்பையும் (7:37) வேறு சிலர், வரம்பு மீறுவோருக்கு தண்டனை கொடுக்கும் பொறுப்பையும் (11:77) கொண்டிருந்த அதேவேளை, இன்னும் சிலர், முஃமின்களுக்கு நன்மையான வைகளில் நிலைத்திருப்பதற்கு உதவி செய்வோர்களாகவும் (41:30), யுத்தத்தில் முஃமின்களுக்கு ஒத்தாசை புரிவோர்க ளாகவும் (33:9) இருக்கின்றனர். இவை தவிர பிரபஞ்ச அமைப்பில் வேறு பல பொறுப்புகளையும் மலக்குகள் கொண்டுள்ளனர்.
இத்தனை பொறுப்புகளும் பணிகளும் அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரமே அமைந்துள்ளமையினால் அஃப்ஆல் மற்றும் ருபூபிய்யத் ஆகிய தவ்ஹீதின் அடிப்படைகளோடு இவை எவ்விதத்திலும் முரண்படுவதில்லை. அத்தோடு, அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரம் நபிமார்கள், மஃசூம்கள், மலக்குகள் ஆகியோர் செய்யும் ஷபாஅத்தும் தவ்ஹீதுடன் எவ்விதத்திலும் முரண்பட்டதல்ல என்பது இவ்விடத்தில் நன்கு தெளிவாகின்றது.
அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரமன்றி ஷபாஅத்துச் செய்வோர் எவருமில்லை.|| (10:03(
எமது நம்பிக்கையின் பிரகாரம் வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. இது பற்றி இபாதத் விடயத்திலான ஏகத்துவம் பற்றிய விளக்கத்தில் குறிப்பிட்டோம். ஆக, அல்லாஹ் அல்லாத எதையும் எவரையும் வணங்கி வழிபடுவது ஷிர்க் ஆகும்.
நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவனில்லை.|(07:59,65,73,85) எனும் வசனம், நபிமார்கள் பலர் கூறியதாக அல்குர்ஆனின் பல இடங்களில் பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் தினந்தோறும் தமது தொழுகையில் சூரா பாத்திஹாவை ஓதுகின்றனர். அதில்,
உன்னையே வணங்குகின்றோம், உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்.|| என்ற இஸ்லாத்தின் முக்கிய மூல மந்திரத்தை பல தடவை தமது நாவினால் எடுத்துரைத்து, அதன் மீதான தமது நம்பிக்கையை பலப்படுத்திக் கொள்கின்றனர்.
எனவே, அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும், அல்லாஹ்வின் அனுமதியுடன் நபிமார்கள், மலக்குகள் செய்யும் ஷபாஅத்தைப் பற்றிய நம்பிக்கை, வணங்குதல் எனும் பொருளைத் தருவதில்லை என்பது தெளிவாகிறது.
மேலும், குறித்த ஒரு தேவைக்காக நபிமார்களின் மூலமாக வஸீலா தேடுவதும் வணக்கமென்று கணிக்கப்பட முடியாது. இது, செயல்கள் மற்றும் வணக்கம் பற்றிய தவ்ஹீதுடன் எவ்விதத்திலும் முரண்பட்டதன்று என்பது எமது நம்பிக்கையாகும்.