நபித்துவம்

நுபுவ்வத்தின் நோக்கம்

மனிதர்களை நேர்வழிப்படுத்துவதற்காகவும் அவர்களை பரிபூரணத்தின் பால் வழிகாட்டு வதற்குமாகவும் நபிமார்களையும் றஸூல்மார்களையும் இறைவன் இவவுலகுக்கு அனுப்பி வைத்தான். நபிமார்கள் அனுப்பப்பட்டிருக்கவில்லையெனில், மனிதப் படைப்பின் நோக்கம் தெளிவற்றதாகப் போயிருப்பதோடு, மனிதர்களும் வழிகேட்டில் மூழ்கும் நிலை தோன்றியிருக்கும்.

அல்லாஹ்வின் மீது மனிதர்களுக்கு சாதகமாக யாதொரு ஆதாரமும் இல்லாதிருப்பதற்காக, தூதர்கள் பலரை நன்மாராயம் கூறுபவர்களாகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அவன் அனுப்பி வைத்தான். மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனும் தீர்க்கமான அறிவுடையோனுமாவான். (04:165)

உலகுக்கு வந்த நபிமார்களுள் ஐந்து போர் உலுல்அஸ்ம் என நாம் நம்புகின்றோம். அவர்கள் புதிய வேதம், புதிய சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தவர்கள் ஆவர். அவர்களில் முதன்மையானவர் ஹஸ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் ஆவார். ஏனையோர், நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரோடு  இறுதித் தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்களும் ஆவர்.

''மேலும் நபிமார்களிடமிருந்தும், உம்மிடமிருந்தும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடம் இருந்தும் அவர்களின் உறுதி மொழியை எடுத்த சமயத்தில், அவர்களிடமிருந்து மிக்க உறுதியான உறுதி மொழியையே நாம் எடுத்தோம் என்பதனை நினைவு கூறுவீராக. (33: 07)

(நபியே!) ரசூல்மார்களில் உலுல் அஸ்ம்கள் பொறுமை கொண்டிருந்தது போல் நீரும் பொறுமை கொண்டிருப்பீராக.(46:35)

பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் உலகிற்கு வந்த இறைத்தூதர்களில் இறுதியானவர் என்றும் அவர்கள் உலகிற்கு அறிமுகப்படுத்திய இஸ்லாம் மார்க்கம், அனைத்து உலகத்தாருக்கும் அனைத்து காலப்பகுதிக்கும் ஏற்ற இறுதி நாள்வரை நடைமுறைப் படுத்தப்படக் கூடிய மார்க்கமாகும் என்றும் நாம் நம்புகின்றோம். இஸ்லாம் மனிதர்களது அன்றாட மற்றும் அவர்களது ஆன்மீக-இலௌகீக வாழ்வுத் தேவைகளையும், படைப்பின் குறிக்கோளையும் பூர்த்தி செய்யத்தக்க அறிவு, சட்டதிட்டங்கள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்குகிறது. எனவே, பெருமானாருக்குப் பின்னர், புதிதாக நபித்துவம் அல்லது புதிய வேதம் பெற்றிருப்பதாகக் கூறுவதும் அதனை நம்புவதும் முற்றிலும் பொய்யான, நிராகரிக்கப்பட வேண்டிய விசயமாகும்.

உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மத் தகப்பனாக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களில் இறுதியானவராகவும் இருக்கின்றார். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.|| (33: 40)

ஏனைய மதத்தவருடன் நல்லுறவு

இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப் பட்ட மார்க்கமாகும் என்று நம்பிக்கை கொள்வதுடன் ஏனைய இறைவேதங்களைப் பின்பற்றக் கூடியவர்க ளுடன் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அத்தகையோர் செயற்படாதவரை, அவர்களுடன் சுமுகமான நல்லுறவைப் பேணுவது அவசியமாகும்.

''மார்க்க விடயத்தில் உங்களுடன் எதிர்த்துப் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்கள் பால் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்க வில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதமாக நடப்பவர்களை விரும்புகின்றான்.' (60:08)

இஸ்லாம், அற்புதமும் பரிபூரணத்துவமும் மிக்க மார்க்கமாகும். அறிவுபூர்வமான சிறந்த தர்க்க ரீதியான ஆய்வுகள் மூலமாக அதன் யதார்த்தத்தை அனைத்து மக்களுக்கும் தெளிவுபடுத்த முடியும். உரிய அணுகுமுறையில் தெளிவுபடுத்தப் படும் போது, இஸ்லாத்தின் பாலான ஈர்ப்பும், விருப்பும் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. மேலும், இஸ்லாத்தின் தூதினைச் செவிமடுக்கத் தயாராகவுள்ள இன்றைய உலகு அதனை வரவேற்றுப் போற்றும்.

அதே வேளை, இஸ்லாம் இயல்பாகவும் சுதந்திரமாகவும் பின்பற்றப்பட வேண்டும். பலாத்காரத்துக்கோ வற்புறுத்தல்களுக்கோ இங்கு இடமில்லை. அல் குர்ஆன் இது பற்றி இவ்வாறு கூறுகின்றது:

''மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமும் கிடையாது. ஏனெனில், வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.|| (02:256)

இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை முஸ்லிம்கள் பூரணமாக தமது அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்தும் போது, அது இஸ்லாத்தின் மீதான பிறரின் நல்லெண்ணத்துக்கும் புரிந்துணர்வுக்கும்; வழிவகுக்கின்றது.   அவ்வாறிருக்க மார்க்கத்தை யார் மீதும் நிர்ப்பந்தமாகத் திணிக்கும் அவசியம் ஏற்படுவதில்லை.

நபிமார்கள் மஃஸூம்களாவர்

நபிமார்கள் அனைவரும் தமது வாழ்நாள் முழுவதிலும் -நுபுவ்வத்துக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி- பாவச் செயல், மறதி, தவறுகளை விட்டும் பரிசுத்தமானவர்களாக இருந்தார்கள் என்பது எமது நம்பிக்கையாகும். ஏனெனில், பாவச்செயல்களிலோ, தவறிழைப்பதிலோ அவர்கள் ஈடுபடும் பட்சத்தில் நபித்துவத்திற்குரிய அந்தஸ்தும், தகைமையும் அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு விடும். தவிரவும், அவர்களை தமது வழிகாட்டியாகவும், முன்மாதிரி யாகவும் எடுத்துக் கொள்வதில் மனிதர்களும் உடன்பாடற்றவர்களாக மாறிவிடுவார்கள்.

ஆயினும் சில நபிமார்கள், பாவங்களில் அல்லது தவறுகளில் ஈடுபட்டதாக அல்குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸிலும் வெளிரங்க அர்த்தத்தில் காண முடிகின்றது. இது ''தர்குல் அவ்லா''|| வகையைச் சேர்ந்ததென்பதே எமது நம்பிக்கையாகும். அதாவது நன்மைக்குரிய இரு அம்சங்களில், நன்மை அதிகமுள்ளதை விட்டு, நன்மை குறைவாக இருப்பதைத் தெரிவு செய்வதாகும்.

நபிமார்கள் அல்லாஹ்வின் அடியார்கள்

நபிமார்களும், ரசூல்மார்களும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு நடக்கக் கூடிய அடியார்கள் என்பது அவர்களுக்குரிய முக்கிய சிறப்பாகும். இதனால் தான், முஸ்லிம்கள் தமது நாளாந்த தொழுகையின் போது பின்வரும் வசனத்தை மீட்டி மீட்டிச் சொல்கின்றனர்.

''நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார்கள் என நான் சாட்சி கூறுகின்றேன்.||

எந்தவொரு இறைத் தூதரும், தன்னை இறைவன் என பிரகடனப்படுத்திக் கொண்டு, தன்னை வணங்கும்படியாக மக்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை.

''எந்தவொரு மனிதருக்கும் வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் அவருக்குக் கொடுத்திருக்க, பின்னர் அவர் மனிதர்களிடம், அல்லாஹ்வையன்றி எனக்கே அடியார்களாகி என்னையே வணங்கி விடுங்கள் என்று கூற இயலாது.|| (03: 79)

ஹஸ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம், சில கிறிஸ்தவர்களால் இறைவன் என மதித்து வணங்கப் படுகின்றார்கள். ஆனால், ஒரு போதும் அன்னார் தம்மை வணங்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, தம்மை அல்லாஹ்வின் தூதர் என்றும் அவனது அடியார் என்றுமே அறிமுகப்படுத்திக் கொண்டு, அல்லாஹ்வை வணங்குமாறே அழைப்பு விடுத்தார்கள்.

''மஸீஹும் அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ளவே மாட்டார்கள்.||  (04:172)

கிறிஸ்தவர்களின் 'திரித்துவம்| (மூவர் கொண்ட தனிக் கடவுள்) எனும் கோட்பாடு, முதலாம் நூற்றாண்டிற்குப் பின்னர் புதிதாகத் தோன்றிய ஒன்றே என வரலாறு கூறுகிறது.

அற்புதங்கள்

நபிமார்கள் அல்லாஹ்வின் அடியார்களேயெனினும் அவர்கள் அல்லாஹ்வின் அனுமதியின் படி சென்றகால, நிகழ்கால, எதிர்கால விசயங்கள் பற்றிய சில தகவல்களைப் பெற்றுக் கொள்ள அது ஒரு போதும் தடையாக இருக்க மாட்டாது என்பதாக அல்குர்ஆன் விபரிக்கின்றது.

'')அல்லாஹ்) மறைவானவற்றை அறிகிறவன். எனவே, தான் மறைத்து வைத்திருப்பவற்றை -தூதர்களில் தான் பொருந்திக் கொண்டோருக்கே தவிர- வேறு ஒருவருக்கும் அவன் வெளிப்படுத்தமாட்டான்.||  (72:26,27)

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், மக்களுக்கு பல இரகசிய விசயங்களைப் பற்றி தகவல் கொடுத்தார்கள். அது அவர்களுடைய பிரத்தியேக அற்புதங்களில் ஒன்றாகும். 

''மேலும், நீங்கள் உண்பவற்றையும், உங்கள் வீடுகளில் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன்.||(03:49)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களும், இறைஞானத்தின் மூலமாக மறைவான சில  விசயங்களைப் புரிந்து கொண்டு. அத்தகைய சில விடயங்களை வெளிப்படுத்திச் சொன்னார்கள்.

'')நபியே!) இது நீர் அறியாத மறைவான செய்திகளில் உள்ளதாகும். இதை உமக்கு நாம் வஹி மூலம் அறிவிக்கின்றோம்.|| (12:102)

இதன் பிரகாரம், வஹியின் மூலமாகவும் இறைவனின் அனுமதியோடும் இறைத்தூதர்கள் மறைவான சில விசயங்களை அறிந்து கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது. சில அல்குர்ஆன் வசனங்களின் படி, மறைவானவை பற்றிய அறிவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு இல்லையென்ற கருத்தை முன்வைப்பது போன்று தோன்றலாம்.

''மறைவானவற்றை நான் அறியமாட்டேன். மேலும், நான் ஒரு மலக்கு என்று உங்களிடம் கூறவும் இல்லை.|| (06:50)                                                                

தான் இயல்பிலேயே மறைவானவை பற்றிய அறிவைக் கொண்டவன் அல்ல என்றும் அது அல்லாஹ்வுக்குரிய விசயம் என்றும் நபியவர்கள் வலியுறுத்துவதாகவே இது உள்ளது. இறை கட்டளைப் படி அல்லது அவனது அனுமதிப் படி சில விசயங்களதை; தெரிந்து வைத்திருப்பது சாத்திய மானதே.

இறைத்தூதர்கள் அல்லாஹ்வின் அனுமதியுடன் பல்வேறு அற்புதங்களை செய்து காட்டினார்கள். எனவே, அவற்றை நம்புவது, ஷிர்க்கை வருத்துவதாகவோ நமது அடிமைத் தனத்தைக் களங்கப் படுத்துவதாகவோ ஆக மாட்டாது என்பது நமது நம்பிக்கையாகும். ஈஸா அலைஹிஸ்ஸலாம், பரிகாரம் காண முடியாது என்றிருந்த நோய்களைக் குணப்படுத்தியதோடு, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அற்புதத்தையும் இறைவனின் அனுமதிப்படி செய்து காட்டினார்கள்.

''நான், அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு வெண்குஷ்டம், கருங்குஷ்ட ங்களை குணப்படுத்துவதோடு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன் என ஈஸா நபி சொன்னார்கள்.||   (03: 49)

நபிமார்களின் ஷபாஅத்

நபிமார்கள் அனைவரும்  குறிப்பாக பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், மறுமை நாளில் பாவிகளில் சிலருக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் அந்தஸ்தைப் பெற்றுள்ளார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். ஆனால், இதுவும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடைபெறும் என்பது கவனிக்கத் தக்கது. அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

''அல்லாஹ்வின் அனுமதியைப் பெற்ற பின்பே தவிர எந்தவொரு சிபாரிசு செய்பவருமில்லை.'    (10:03)

''அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுவோர் யார்?|(02: 255)

அதேவேளை, சில அல்குர்ஆன் வசனங்கள், சிபாரிசு செய்வதென்று ஒன்று இல்லை என்ற கருத்தைச் சொல்வதாக பொதுவாகத் தோன்றலாம்.

''எவ்விதமான பரிமாற்றமும் நட்பும் பரிந்துரையும் இல்லாத நாள் வருமுன்......|(02: 254)

இங்கு குறிப்பிடப்படும் (ஷபாஅத்) பரிந்துரை என்பது அல்லாஹ்வின் அனுமதி இல்லாது, சுயவிருப்பின் பேரில் செய்யப்படும் பரிந்துரையைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது, தகுதியற்றோர் பரிந்துரை செய்வதைக் குறிக்கலாம். நபிமார்களோ, சுயவிருப்பின் பேரிலல்லாமல், அல்லாஹ்வின் அனுமதி யுடனேயே பரிந்துரை செய்வதும் அவர்கள் பரிந்துரை செய்வதற்கு முழுத் தகுதியும் உள்ளவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பரிந்துரையானது, மனிதர்களிடையே ஒழுக்கம், தூய்மை, இறையச்சம் போன்ற பண்புகளைக் கட்டியெழுப்புவதற்கும் ஆன்மீக உரமூட்டல்களை மேற்கொள்வதற்கும் பாவிகளை நல்வழிப் படுத்தவும் நல்வழியில் தூண்டவும் சிறந்த காரணியாக அமைந்துள்ளது. அதேவேளை, ஷபாஅத் என்பதும் வரையறைகளற்ற எளிய விடயமல்ல.

மேலும், ஷபாஅத் செய்யப்படுவோர் பாவிகளாக இருப்பினும், அவர்களது பாவச்செயல், சிபாரிசு செய்யக் கூடியவர்களுடன் இருக்கும் தொடர்பை முற்றாகத் துண்டிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. இதனால் தான், பாவிகள் தமக்குரிய அனைத்து ஷபாஅத்துக்கான படிகளையும் தகர்த்து விட வேண்டாமெனவும், அவற்றை முடிந்தவரை பேணிக் கொள்ளுமாறும் இஸ்லாம் எச்சரித்து வலியுறுத்து கின்றது.

தவஸ்ஸுல் (வஸீலா தேடுதல்)

வஸீலா தேடுவதென்பதும் ஷபாஅத்தைப் போன்ற ஓர் அம்சமே. இது, இறைநேசர்கள், இறைவனின் அனுமதிப் பிரகாரம் எமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இறை சந்நிதானத்தில் உதவுவதையே குறிக்கிறது. அதாவது, நாம் அல்லாஹ்வையே விளித்து, பிரார்த்தனையில் ஈடுபடுகின்றோம். மறுபுறம் இறைநேசர்களை நமது பிரார்த்தனைக்கான உதவியாகக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

''இன்னும், நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொண்டு உம்மிடம் வந்து, பின்னர் அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்புக்கோரி, அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால், தவ்பாவை ஏற்பவனாகவும் மிகக் கிருபையுடையவனாகவும் அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள். (04:64)

நபி யூசுபின் (அலைஹிஸ்ஸலாம்) சகோதரர்கள், தமது தந்தையை வஸீலாவாகக் கொண்டு, தாம் செய்த குற்றத்திற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினார்கள். அவர்கள், தம் வயோதிபத் தந்தையான ஹஸ்ரத் யஃகூப் நபியை (அலைஹிஸ்ஸலாம்) நோக்கிக் கூறினார்கள்:

எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு நீங்கள் எங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவீர்களாக. நிச்சயமாக நாம் குற்றவாளிகளா வோம். (12:97)

நபி யஃகூபும் அலைஹிஸ்ஸலாம் தமது மக்களின் வேண்டுகோளை ஏற்று அல்லாஹ்விடத்தில் அவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுவதாகக் கூறினார்கள்.

''நான் விரைவில் என் இறைவனிடத்தில் உங்களுக்காக மன்னிப்புக் கோருவேன். (12: 98)

இது போன்ற ஆதாரங்கள் அனைத்தும் வஸீலா என்பது முன் சென்ற உம்மத்தாரின் வழிமுறையாக இருந்தது என்பதை ஊர்ஜிதம் செய்கின்றன.

ஆயினும், வஸீலாவுடைய சந்தர்ப்பங்களில் எல்லைகளை சரியாகப் பேணிக் கொள்வது மிக இன்றியமையாத அம்சமாகும். இறைநேசர்கள், அனைத்து விடயங்களிலும் தாமாக சக்தி கொண்டவர்கள் என்றோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் அனுமதியோ, உதவியோ அவசியற்றது என்றோ நம்பிக்கை கொண்டு விடக் கூடாது. இது, மன்னிக்க முடியாத பாவச் செயலான இணைவைத்தலுக்கு இழுத்துக் கொண்டு சேர்க்கும்.

மேலும், வஸீலா தேடுவதென்பது, இறை நேசர்களை வணங்கும்  அடிப்படையில் அமைந்து விட்டால், அதுவும் இணைவைத்தலாகி விடும். இறைநேசர்களாயினும் அவர்களும் அல்லாஹ்வின் அடியார்களாகவும், அவனது உதவியின்றி எவ்வித காரியமாற்றுவதற்கும் சக்தியற்றவர்களாகவுமே இருக்கி ன்றார்கள் என்பது மறுக்க முடியாத அம்சமாகும்.

''(நபியே!) கூறுவீராக! அல்லாஹ் நாடினாலே தவிர, எனக்கு நானே நன்மை-தீமையைத் தடுத்துக் கொள்வதற்கும் சக்தி பெறமாட்டேன். (07:188)

எல்லா மத்ஹபைச் சேர்ந்தவர்களிடத்திலும் வஸீலா தேடும் விசயத்தில் சார்பாகவும் முரணாகவும் அதி தீவிரப் போக்கைக் கடைப்பிடிப்போர் உள்ளனர். இவர்களுக்கு இதன் உண்மை தெளிவுபடுத்தப் பட்டு வழிகாட்டப்படுவது அவசியமாகும்.

நபிமார்களுடைய அழைப்பு

உலகிற்கு அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்க ளினதும் அழைப்பின் நோக்கம் ஒன்றாகவே இருந்துள்ளது என நம்புகின்றோம். மனிதர்களை இறை நம்பிக்கையின் மூலமாகவும், மறுமை விசுவாசத்தின் மூலமாகவும் விமோசனத்தின் பால் கொண்டு சேர்ப்பதாகவே இருந்தது. இந்நோக்கை அடைவதற்காக, கற்பித்தல், முறையான பயிற்றுவித்தல், வழிகாட்டல் என பல்வேறு அர்ப்பணிப்புடனான பணிகளை அவர்கள் மேற்கொண்டார்கள். இதனாலேயே, அனைத்து நபிமார்களும் முஸ்லிம்களிடத்தில் ஏற்றத் தாழ்வின்றி மதிப்பு மிக்கவர்களாகவும் விருப்புக்குரிய வர்களாகவும் விளங்குகின்றார்கள்.

''அவனுடைய தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமைப்படுத்தி விடமாட்டோம். (02:285)

காலவோட்டத்தில் மனித இனத்தின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்புடைத்த விதத்தில், அவர்களுக்கு கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வந்த சமய வழிகாட்டல்கள், பின்னையது முன்னையதை விட பரிபூரணத்துவத்தில் கூடியதாகவும் ஆழமிக்கதாகவும் காணப்பட்டது. இறுதியாக, மிகப் பரிபூரணத்துவம் பெற்ற வழிகாட்டலின் அவசியமும் அதற்குரிய நிலைமைகளும் தோன்றிய போது இறுதி வேதமாக இஸ்லாம் அருளப்பட்டது. கட்டம் கட்டமாக முன்னர் வழங்கப்பட்டு வந்த முன்னைய வழிகாட்டல்களை விஞ்சிய அதன் ஏக பரிபூரணத்துவத்தைப் பற்றி பின்வரும் இறைவாக்கு வெளியாகியது.

''இன்றைய நாள், உங்களுக்காக உங்களது மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். இன்னும், என்னுடைய அருட் கொடையை  உங்கள் மீது முழுமையாக்கி விட்டேன். மேலும், உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்.(05:03)

முந்திய நபிமார்களின் அறிவிப்பு

அநேகமான நபிமார்கள், தமக்குப் பின் வரவுள்ள இறைத்தூதரைப் பற்றிய முன்னறிவிப்புகளை மக்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்), நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) ஆகியோர் இறுதி இறைத்தூதரான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி) நபியின் வருகை பற்றி மக்களுக்கு முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அவற்றில் சில இப்போதும் அச்சமயத்த வர்களது வேத நூல்களில் காணப்படுகின்றன.

''அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் குறிப்பிடப்பட்டுள்ள உம்மி நபியான இத்தூதரை பின்பற்றுகின்றார்கள்..... அவர்கள் தாம் வெற்றியாளர்கள். (07:157)

நபி முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி) நபித்துவத்திற்கு முன்னர், யஹூதிகளின் மிகப் பெரும் கூட்டமொன்று, மதீனாவில் குடியேறி, முஹம்மத் நபியவர்களின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஏனெனில், அவர்களது வேதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இறைத்தூதர் இம்மண்ணிலிருந்து தான் வருவார் என அவர்கள் நம்பியிருந்தனர்.

நபிகளார், உலகில் தமது தூதுத்துவத்தைப் பகிரங்கப் படுத்திய போது, அவர்களில் சிலர் அதனை ஏற்றுக் கொண்டனர். வேறு சிலரோ தமது நலனையும், சுயலாப த்தையும் கருத்திற் கொண்டு நபியவர்களைப் புறக்கணித்து அலட்சியம் செய்தனர்.

நபிமார்களும் சீர்திருத்தப் பணியும்

நமது நம்பிக்கையின் படி, இஸ்லாம் மார்க்கம், வெறுமனே மனிதர்களது ஆன்மீக நிலையை தெளிவுபடுத்தி, நல்லொழுக் கத்தை வரையறை செய்வதற்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக அது, சமூக வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் சீர்படுத்திச் சிறப்புறச் செய்வதிலும் கவனம் செலுத்துகிறது. அன்றாட வாழ்வுக்கு அவசியமான பல்வேறுபட்ட சாஸ்திரங்களையும் கலைகளையும் மக்கள் நபிமார்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். அல்குர்ஆனும் அவற்றுள் சிலவற்றைத் தொட்டுக் காட்டுகிறது.

சமூகங்களின் மத்தியில் நீதியை நிலைநிறுத்து வதும் நபிமார்களுடைய முக்கிய பணியாக விளங்கியது என நாம் நம்புகிறோம்.

''நிச்சயமாக நாம், நம்முடைய தூதர்களை தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பி வைத்தோம். அவர்களுடன் வேதத்தையும், நீதியைக் கொண்டு நிலைத் திருப்பதற்காக தராசையும் இறக்கினோம்.(57: 25)

மானுட சமத்துவம் பேணல்

நபிமார்கள் எவரும் இன, வர்க்க, குல ரீதியான வேறுபாடுகளை அங்கீகரிக்க வில்லை. சகல குலத்தாரும், சகல மொழி பேசுவோரும் அவர்களது பார்வையில் சமத்துவம் மிக்கோராகவே காணப்பட்டனர். அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

''மனிதர்களே! நிச்சயமாக நாம், உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். இன்னும், ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணிய முள்ளவர் உங்களில் மிக்க பயபக்தி உடையவர் தான்.(49:13)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்கள், ஹஜ்ஜதுல் விதாவின் போது, மினாவில் வைத்து, ஒட்டகத்தின் மீது அமர்;ந்தவர்களாக மக்களை நோக்கிச் சொன்னார்கள்:

''மனிதர்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவனும் ஒருவன். உங்கள் தந்தையும் ஒருவர். எனவே, இறையச்சத்தின் மூலமாக அல்லாமல், வேறெதனாலும் ஓர் அறபி அஜமியை விட சிறந்தவரில்லை. ஓர் அஜமியும் அறபியை விட சிறந்தவரில்லை. இன்னும், கறுப்பனுக்கு சிவந்த நிறமுடையவனை விட சிறப்பில்லை, சிவந்த நிறமுடை யவனுக்கு கறுப்பனை விட சிறப்புமில்லை. எனவே, நான் இறை தூதை எத்தி வைத்து விட்டேனா?|| என்று வினவினார்கள். அதற்கு அங்கிருந்தோர் ''ஆம்|| எனக் கூற, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், ''இங்கு சமுகமளித் திருப்பவர்கள், வராதிருப்போருக்கு இவற்றைத் தெரியப் படுத்துங்கள்|எனக் கூறினார்கள்.  ( தப்ஸீருல் குர்துபி - பா 9 - பக் 6162)

இஸ்லாமும் மனிதனது இயல்பூக்கமும்

ஏகத்துவத்தின் அடிப்படையில் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையும், நபிமார்களது கற்பித்தலின் அடிப்படைகளும் இயல்பாகவே மனிதர்களுடைய ஆத்மாவுடன் மேலோட்டமாக பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன என நாம் நம்புகின்றோம். இறைத் தூதர்கள், அதிக கனி தரக்கூடிய இவ்விதைகளுக்கு வஹியெனும் கடலிலிருந்து நீர் பாய்ச்சி, அவற்றின் ஓரங்களில் இருந்து ஷிர்க் போன்றகளைகளை அப்புறப்படுத்தினார்கள்.

''எந்த இயல்பில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ,அதுவே அல்லாஹ்வின் இயற்கை மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றமில்லை. அதுவே நிலையான மார்க்க மாகும். ஆனால், மனிதர்களில் பெரும்பாலா னோர் இதை அறிய மாட்டார்கள்.'(30: 30)

இதனால் தான், மக்களிடையே சமய நம்பிக்கை தொன்மை வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. பெரும் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப் படி, நாஸ்திகம் என்பது மிகவும் அரிதாகக் காணப்பட்ட ஒன்றாகும். இதனால் தான், வாழ்நாள் முழுவதும் சமய விரோத அடக்குமுறைகளுக்கும் துர்ப் பிரசாரங்களுக்கும் மத்தியில் வாழ்ந்த மக்களும் கூட, சுதந்திரத்தின் பின்னான வாழ்வில் சமயத்தின் பால் வேட்கையோடு ஓடி வருகின்றார்கள்.

ஆனால், முன்னிருந்த பல சமுதாயத்தவர்களின் வளர்ச்சியடையாத கலாசாரப் பண்புகள், அவர்களது மார்க்கத்திலும் ஒழுக்க நெறிமுறைகளிலும் மூடக் கொள்கைகள் இரண்டறக் கலப்பதற்குக் காரணமாக அமைந்திருந்தன என்ற உண்மையையும் மறுக்க முடியாது. மனிதர்களது இயல்பூக்கமான மார்க்கத்தை, இத்தகைய கறைபடிந்த மூடக் கொள்கைகளிலிருந்து பரிசுத்தமாக்குவதும் நபிமார்களின் ஒரு முக்கிய பணியாக விளங்குகிறது.