முந்திய அத்தியாயங்களில் மார்க்கத்தின் அடிப்படையான ஈமானின் அம்சங்கள் பற்றிய சுருக்கமான விளக்கம் முன்வைக்கப் பட்டது. இவ் அத்தியாயத்தில், மார்க்கத்தின் வேறு சில முக்கிய விடயங்கள் பற்றிய நமது நம்பிக்கைகளை ஆராய்வோம்.
மனிதனுடைய அறிவு, பெரும்பாலான விசயங் களில் நல்லவற்றையும் தீயவற்றையும் பகுத்தறிந்து கொள்ளும் இயல்பு டையதாகும். வாழ்வில் நல்லவற்றை கைக்கொண்டு, தீயவற்றைக் கைவிடுவதற்காக மனிதர்க ளுக்கு அல்லாஹ் வழங்கிய பெரும் அருட்கொடையே இதுவாகும். இறைவேதங்கள் இறங்குவதற்கு முற்பட்ட காலங்களில், அறிவின் மூலமாக பல விடயங்களில் நன்மை-தீமைகளை உணர்ந்து செயற்படுவோராக மனிதர்கள் இருந்தனர்.
இதன்படி உண்மை, நேர்மை, வீரம், நீதி, பெருந் தன்மை, விட்டுக்கொடுப்பு, தர்மம் போன்ற பல அம்சங்களை நல்லவை யாகவும் பொய், துரோகம், கஞ்சத்தனம், பிடிவாதம், கோழைத் தனம் போன்ற பல அம்சங்களை தீயவையாகவும் அறிவு பகுத்தாய்ந்து புரிந்து கொள்கின்றது.
மனிதனின் அறிவு, வரையறைக்குட்பட்டது என்ப தால் அதனால் அனைத்தையும் பிரித்தறிந்து கொள்வ தென்பது சாத்திய மற்றது. எனவே, அறிவு மூலம் மட்டும் விளங்கிக் கொள்ளப்பட முடியாத விளக்கங்களையும் ஞானங்களையும் அறிவிப்பதற் காகவே வேதங்களையும் இறைத்தூதர்களையும் இறைவன் அனுப்பினான்.
எனவே, அறிவானது உண்மையை உரியபடி உணர்வதில் சுதந்திரமாகச் செயற்படுகின்றது என்பது முற்றாக நிராகரிக்கப்படு மானால், ஏகத்துவம், நபிமாரின் வருகை, இறைவேதங்கள் பற்றிய நம்பிக்கைகள் பாழாகி விடலாம். ஏனெனில், அல்லாஹ்வின் உள்ளமையை நிரூபிப்பதும் நபிமாரின் பணியை உண்மைப்படுத்து வதும் அறிவின் மூலமேயாகும். ஏகத்துவம், நபித்துவம் பற்றி நிரூபிக்கின்ற போது, முதலில் அறிவு ரீதியான ஆதாரங்களைக் கொண்டே அவற்றை நிரூபிக்க வேண்டும். மாறாக, மார்க்க ஆதாரங்களைக் கொண்டு மாத்திரம் இவற்றை நம்பச் செய்ய முடியாது.
அல்லாஹ் நீதியானவன் என்பது நமது உறுதியான நம்பிக்கையாகும். அவ்வாறே அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநீதியிழைப்பதும் ஆதாரமில்லாது ஒருவரைத் தண்டிப்பதும் அல்லது மன்னிப்பதும் தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாது விடுவதும் தகுதியில் லாத மற்றும் பிழை செய்வோரை நபிமார்களா கத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேதங்கள், தூதுத்துவம், அற்புதங்களைக் கொடுப்பதும் எவ்விதத்திலும் சாத்திய மற்றன வாகும். சீதேவிகளாக வாழவேண்டும் என்பதற்கா கப் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு, நபிமார்களை அனுப்பி நேர்வழியை அறிவிக்காது விட்டுவிடுவதும் அல்லாஹ்வினது நீதியைப் பொறுத்தவரை சாத்திய மற்றதாகும்.
அல்லாஹ் நீதியாளனாகவும், தன் அடியார்களுக்கு சிறிதளவும் அநீதி இழைக்காதவனாகவும் இருக்கின்றான். அநீதி என்பது, அல்லாஹ்வின் தெய்வீக இயல்புக்கு முற்றிலும் ஒவ்வாத ஓர் அம்சமாகும்.
'இன்னும் உமதிறைவன் எவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.' (18:49)
எனவே, இவ்வுலகிலோ மறுமையிலோ மனிதர்களுக்கு அல்லாஹ்வினால் தண்டனை வழங்கப் படுகின்றதெனில், அதற்கு முழுக் காரணமாகவும் அம்மனிதனே இருக்கின்றான். அவனது செயல்களே அவனது நிலை யை நிர்ணயம் செய்கின்றன.
'ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்ய வில்லை. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர்.' (09:70)
மனிதர்களுக்கு மாத்திரமல்ல, தான் படைத்த எந்த வோர் உயிரினத்துக்கும் அல்லாஹ் அநீதியிழைக் கமாட்டான்.
'மேலும், இறைவன் உலகத்தாருக்கு அநீதியை நாடமாட்டான்.' (03:108)
அல்லாஹ், மனிதர்களால் செய்ய முடியாத எந்த விடயத்தையும் அவர்களில் திணிப்பதில்லை. அவ்வாறு திணித்து, அவற்றை அவர்கள் செய்யாது விட்டமைக்காக அவன் தண்டனை வழங்குவானானால், அவன் நீதியாளன் என்பதற்கு அர்த்தமில்லாது போய்விடும்.
'இறைவன், மனிதர்களுக்கு அவர்களது சக்திக்கு அப்பாற் பட்டதை ஏவமாட்டான்.' (02: 280)
அல்லாஹ் மனிதனை தெரிவுச் சுதந்திரம் உள்ளவனாகவே படைத்துள்ளான். மனிதர்களது செயல்கள் அனைத்தும் அவர்களது விருப்பத்தின் படியே இடம்பெறுகின்றன என்று நாம் நம்புகின் றோம். இதற்கு மாறாக மனிதனின் செயல்பாடுகளை அவரவரது விதி அல்லது இறை நியதி நிர்ணயிக்கிறது எனக் கொள்ளுமிடத்து மனிதர்களது குற்றத்திற்காக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதும், நல்லவர்களுக்கு நற்கூலி வழங்குவதும் அர்த்தமற்றதாகிவிடும். எனவே, இத்தகைய சீரற்ற போக்குகள் அல்லாஹ்வில் அறவே இருக்க முடியாதவையாகும்.
சுருங்கக் கூறின், அநேகமான விடயங்களைப் பிரித்தறி வதிலே, மனிதனது அறிவு, சிந்தனை என்பன சுதந்திரமாக செயற்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்வது மார்க்கத்தின் தவிர்க்க முடியாத அம்சமாக அமைகின்றது. ஆனால், மனிதனது குறுகிய, வரையறைக்குட்பட்ட அறிவின் மூலமாக எல்லா உண்மை களையும் புரிந்து கொள்ள முடியாதிருப்பதன் காரணமாகவே, அல்லாஹ் தன் நபிமார்களையும் வேதங்களையும் இவ்வுலகுக்கு அனுப்பினான்.
மேற்கூறிய விளக்கங்களின் அடிப்படையில், அறிவு (அக்ல்) என்பது, மார்க்கத்தின் அடிப்படை மூலாதாரங்களில் ஒன்றாகும் என நாம் கருதுகின்றோம். அறிவு, ஒரு விடயத்தை உறுதியாக விளங்கி, அறிந்து, அதைப் பற்றி தீர்ப்பு வழங்கும் தன்மை கொண்டது.
உதாரணமாக, அநியாயம், பொய், கொலை, களவு முதலான செயல்கள் தீயவையென குர்ஆனிலும், ஹதீஸிலும் விளக்கம் தரப்படவில்லையென வைத்துக் கொள்வோம். அத்தகைய சந்தர்ப்பத்தில் அறிவு அவை தீயவையென இனங் காண்பித்திருக்கும். எனவே தான், அறிவு (அக்ல்) என்பது முக்கியத்துவம் மிக்க ஓரிடத்தைப் பெறுகின்றது. இம்முக்கியத் துவத்தை விபரிக்கும் அல்குர்ஆன் வசனங்கள் பல உள்ளன.
ஏகத்துவப் பாதையை ஆய்வு செய்வதற்காக, வானம் பூமியிலிருக்கும் இறை அத்தாட்சிகளைப் படித்து ப்பார்க்க வருமாறு, அல்குர்ஆன் அறிவுடையோருக்கு அழைப்பு விடுக்கின்றது.
'நிச்சயமாக வானங்கள், பூமியைப் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடை யோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.' (03:190)
பிறிதோர் இடத்தில், இறைவசனங்களை விபரிப்பதன் நோக்கம், மனிதர்களது அறிவு, சிந்தனை, விளங்கும் தன்மையை அதிகரிப்பதற்காகவே என்று கூறுகின்றது.
'அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் நம்முடைய வசனங்களை எவ்வாறு பலவகை களில் திருப்பித் திருப்பிக் கூறுகின்றோம் என்று நீர் கவனிப்பீராக.' (06:65)
தீயவற்றிலிருந்து நல்லவற்றைப் பிரித்தெடுப் பதற்கு சிந்தனையைப் பயன்படுத்துமாறு அனைத்து மனிதர்களு க்கும் அல்குர்ஆன் அழைப்பு விடுக்கின்றது
'குருடனும், பார்வையுடையோனும் சமமாவார் களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என வினவுங்கள்.' (06:50)
உண்மையை விளங்கிக் கொள்வதற்கு அல்லாஹ்வின் அருட்கொடைகளான அறிவு, கண், காது முதலானவற்றைப் பயன்படுத்தாதவர்களை அல்குர்ஆன், மிக இழிவானவர்களாகக் கருதுகின்றது.
'நிச்சயமாக, அல்லாஹ்விடம், மிருகங்களிலும் மிகக் கெட்டவை, சிந்தித்து விளங்கிக் கொள்ளாது செவிடர்களாக வும் ஊமைகளாகவும் இருப்போர் தான்.' (08:22)
இவை தவிர, இன்னும் பல வசனங்களும் அறிவின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகின்றன.அறிவுக்கு இஸ்லாத்தில் இத்தகைய முக்கியத்துவம் வழங்கப் பட்டிருக்கும் போது, இஸ்லாத்தின் அடிப்படையிலும் அதனையொட்டிய பிரிவுகளிலும் அறிவின் பங்கைக் குறைத்து மதிப்பிடுவது எவ்வகையில் நியாயமாகும்?
உலகில் நிகழ்கின்ற பூகம்பம், புயல் மற்றும் பாரிய இயற்கை அனர்த்தங்கள் அழிவுகளின் பின்னணி பற்றிய நமது நம்பிக்கையின் படி, அவை சிலவேளை இறைவனின் தண்டனையாக வரும்.
'நம்முடைய கட்டளை வந்ததும், அவர்களது ஊரின் மேற்பகுதியை அதன் கீழ்ப்பகுதியாக தலைகீழாக ஆக்கிவிட்டோம். இன்னும், அதன் மீது சுடப்பட்ட கற்களை மழையாகப் பொழியச் செய்தோம்.' (11:82)
வரம்பு மீறிய 'ஸபஉ' நகரவாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது :
'அவர்கள் நம்மை மறுத்து விட்டனர். ஆதலால், நாம் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய வெள்ள த்தை அவர்களுக்கு அனுப்பினோம்.' (34:16)
வேறு சில அனர்த்தங்களுக்குப் பின்னணியாக அமைவது அவற்றின் மூலம் மக்களிடையே உண்மையின் பால் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இவ்வகைச் சோதனைகள் ஒரு புறத்தில் அல்லாஹ்வின் அருளாகவும் கொள்ளப்படுகின்றது.
'மனிதர்களின் கைகள் சம்பாதித்த தீயவற்றின் காரணமாக கரையிலும் கடலிலும் குழப்பம் வெளிப்பட்டு விட்டது. அவர்கள் செய்தவற்றில் சிலதை, அவர்கள் சுவைக்கும் படி செய்வதற்காக, அவன் இவ்வாறு சோதிக்கிறான். அதன் மூலம் அவர்கள் அவன்பால் திரும்பி விடலாம்.' (30:41)
மற்றொரு வகையான அனர்த்தங்கள் மனிதர்கள் தாமாகவே வலிந்து ஏற்படுத்திக் கொண்டவையாகும்.
'நிச்சயமாக, அல்லாஹ் எந்தவொரு கூட்டத்தின ரையும், அவர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளாதவரை மாற்றமாட்டான்.' (13:11)
'உனக்கு யாதொரு நன்மை ஏற்பட்டால், அது அல்லாஹ் வினால் ஏற்பட்டது. இன்னும் உனக்கு யாதொரு தீங்கு ஏற்பட்டால், அது உன்னால் தான் உனக்கு ஏற்பட்டது.' (04:79)
பிக்ஹ் எனப்படும் மார்க்கத்தின் சட்டங்கள் நான்கு மூலாதாரங்களிலிருந்து தொகுக்கப்படுகின்றன. அவை யாவன:
1. அல்குர்ஆன்: இது இஸ்லாமிய அறிவு, சட்டதிட்டங்கள் அனைத்தினதும் ஊற்றுக் கண்ணாகும்.
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களினதும், அவர்களது அஹ்லுல்பைத் வழியில் தோன்றிய பரிசுத்த இமாம்களினதும் வழிமுறைகள்.
3. இஜ்மாஉ: அறிஞர்களின் ஏகோபித்த கருத்தொற்றுமை. (நபியவர்கள் அல்லது இமாம்களின் அபிப்பிராயம் மற்றும் தீர்ப்புகளிலிருந்து வெளிப்படுவதாக அமைய வேண்டும்.)
4. அக்ல் (அறிவு): அறிவின் அடிப்படையிலான சந்தேகத்துக்கு இடமற்ற தீர்க்கமான (கத்'ஈ) முடிவுகளைக் குறிக்கிறது.
கியாஸ், இஸ்திஹ்ஸான் போன்ற, தீர்க்கமான முடிவுகளைத் தராத சந்தேகத்திற்கிடமான (ழன்னீ) ஆதாரங்களை மார்க்க சட்ட விடயத்தில் நாம் மூலாதாரமாக அங்கீககரிப்பதில்லை. அவற்றின் மூலம் அண்ணளவான கருதுகோள்கள் மாத்திரமே பெறப்பட முடியும் என்பது இதற்குக் காரணமாகும். ஆயினும் தீர்க்கமான முடிவுகளைத் (உதா: நீதி நல்லது, அநீதி கூடாது போன்ற) தரும் போது அறிவின் இத்தகைய முடிவு ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது.
பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களதும் இமாம்களதும் வழிகாட்டல்கள், மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் தெளிவுபடுத்தி நிற்கின்றன. இதனால், அண்ணளவான, தீர்க்கமற்ற ஆதாரங்களின் பால் செல்வது அவசியமற்றதாகிறது. மாறும் உலகில் தோன்றுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை குர்ஆன் ஹதீஸில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்றே நாம் நம்புகின்றோம்.
மார்க்கத்தின் சகல விஷயங்களிலும் இஜ்திஹாதின் கதவு திறந்திருக்கின்றது என்பது நமது நம்பிக்கையாகும். அதாவது, மார்க்கச் சட்ட நிபுணர்கள், மார்க்கத்தின்; அடிப்படை மூலாதாரங்களிலிருந்து சட்டங்களைத் தொகுத்தெடுத்து அவ்வாறு தாமாகத் தொகுத்தறிந்து கொள்ளும் சக்தியைப் பெறாதவர்க ளுக்கு வழங்க முடியும். அவர்களது கருத்துகள், முந்திய முஜ்தஹிதுகளின் கருத்தை ஒத்ததாக இல்லாவிடினும் சரியே. மார்க்கத் தீர்ப்புகளை தாமாகத் தொகுத்துத் தெரிந்து கொள்வதற்கான பூரண அறிவற்றவர்கள், நன்கு பாண்டித்தியம் பெற்ற, சமகாலத்தில் வாழுகின்ற மார்க்க நிபுணரைப் பின்பற்றுவது அவசியமாகும்.
இவ்வாறாக ஒரு முஜ்தஹிதின் வழிகாட்டலை ஏற்று நடப்பதை தக்லீத் என்றும் அத்தகைய முஜ்தஹிதுகளை 'மர்ஜஉத் தக்லீத்' என்றும் அழைக்கின்றோம்.
முன்னர் எப்போதோ வாழ்ந்த ஒரு முஜ்தஹிதைப் பின்பற்றுவதை நாம் அனுமதிப்பதில்லை. சமகாலத்தைச் சேர்ந்த ஓர் முஜ்தஹிதைப் பின்பற்று வதன் மூலம் மார்க்க சட்ட விளக்கங்களில் உயிரோட்டமும் பசுமையும் பாதுகாக்கப்படுவதாக நம்புகின்றோம்.
இஸ்லாமிய சட்டத்தில் விடுபட்டுப் போன எதுவும் இருப்பதாக நாம் நம்புவதில்லை. இஸ்லாம் விபரிக்காத வாழ்வின் அம்சங்கள் எதுவுமில்லை. மறுமை நாள் வரை மனிதர்களுக்குத் தேவையான அனைத்து சட்டங்களும் குறிப்பாகவோ, பொதுவாகவோ இஸ்லாமிய மூலாதாரங்க ளூடாக விபரிக்கப்பட்டுள்ளன. எனவே, மார்க்க சட்ட நிபுணர்கள், அம்மூலாதாரங் களிலிருந்து சட்டங்களைத் தொகுக்க முடியுமே யல்லாமல், புதிதாக சட்டங்களை உருவாக்க முடியாது. அல்குர்ஆனில் இறுதியாக அருளப்பட்ட வசனம் இவ்வாறு குறிப்பிடுகின்றது:
'இன்றுடன் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கினேன். எனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கினேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாகப்; பொருந்திக் கொண்டேன்.' (05:03)
எல்லாக் காலங்களுக்கும் சமுதாயங்களுக்கும் தேவையான சட்ட திட்டங்களையும் வழிகாட்டல்களையும் தன்னகத்தே கொண்டிராவிட்டால், 'பரிபூரணமாக்கி விட்டேன்' என இறைவனால் விதந்துரைக்க முடியுமா?
அண்ணல் நபி ஸல்லல்வாஹு அலைஹி வஆலிஹி தமது இறுதி ஹஜ்ஜின் போது, மக்களைப் பார்த்து இவ்வாறு குறிப்பிட்டார்கள்:
''மனிதர்களே! அல்லாஹ் மீது ஆணையாக, எவை உங்களை சுவர்க்கத்திற்கு சமீபமாக்கி, நரகை விட்டும் தூரமாக் குமோ அவை அனைத்தையும் நான் ஏவியுள்ளேன். மேலும், எவை உங்களை நரகிற்கு சமீபமாக்கி சுவனத்தை விட்டும் தூரமாக் குமோ அவை எல்லாவற்றையும் நான் தடுத்துள்ளேன்.' (உசூலுல் காஃபீ, பாக.2, பக்.74)
மேலும் இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் குறிப்பிட்டார்கள்:
'இஸ்லாமிய சட்டங்களில், விரலின் நுனியினால் உடம்பில் உராய்ந்தால் அதற்குரிய தண்டம் பற்றிக் கூட, நபியவர்கள் கூற ஹஸ்ரத் அலீ அலைஹிஸ்ஸலாம் எழுதிக் கொண்டார்.' (ஜாமிஉல் அஹாதீஸ், பாக.1, பக்.18)
இந்நிலையில் தீர்க்கமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லாத கியாஸ், இஸ்திஹ்ஸான் போன்ற முறைக ளினால் பெறும் முடிவுகளை மார்க்க சட்டங் களைத் தொகுத்தெடுப்பதற்கான மூலாதாரங்களாகக் கொள்வது பொருத்தமற்றதாகவே நாம் கருதுகிறோம்.
பிடிவாதம் பிடித்த முரடர்களிடம் அகப்பட்டுக் கொண்ட ஒருவர் தனது கொள்கையைப் பற்றி வெளிப் படையாகத் தெரியுமிடத்து ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும் என்று அஞ்சுகின்ற நிலையில், கொள்கையை வெளியிடுவதால் எப் பிரயோசனமும் ஆகப் போவதில்லை எனக் கண்டால் தன் கொள்கையை மறைத்துக் கொள்வதில் தப்பில்லை. இதுவே 'தகிய்யா' எனப்படுகின்றது. இவ்விடயம், அறிவு ரீதியானது மட்டுமன்றி அல்குர்ஆனின் வசனங்களும் கூட பறைசாற்றும் ஒரு விசயமாகும்.
அல்குர்ஆன், பிர்அவ்னுடைய குடும்பத்திலிருந்த ஒரு முஃமினுடைய விடயத்தை இவ்வாறு விபரிக்கின்றது:
'பிர்அவ்னுடைய குடும்பத்தினரில், தனது ஈமானை மறைத்து வைத்திருந்த முஃமினான மனிதர் சொன்னார், 'ஒரு மனிதரை, அவர் அல்லாஹ்தான் எனது இரட்சகன் என்று கூறியதற்காக நீங்கள் கொலை செய்து விடுவீர்களா? அவரோ உங்கள் இரட்சகனிட மிருந்து தெளிவான அத்தாட்சிகளை திட்டமாகக் கொண்டு வந்திருக்கின்றார்.' (40:28)
இங்கு 'அவரது ஈமானை மறைத்தார்' எனக் கூறப்படுவதே தகிய்யாவுடைய நிலை ஆகும். எனவே, பிர்அவ்னுடைய குடும்பத்திலிருந்த அந்த விசுவாசி யானவர், தனது ஈமானை மறைக்காது வெளிப்படுத்தி, ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அது பயனுள்ளதாகவும் இருந்திருக்காது.
மேலும், அல்குர்ஆன் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் முஷ்ரிக்குகளிடம் அகப்பட்ட சில முஸ்லிம் வீரர்கள் மற்றும் முஜாஹிதீன்களை தகிய்யாவை பேணுமாறு கட்டளை பிறப்பித்தது.
'முஃமின்கள், தங்களைப் போன்ற முஃமின்களை யன்றி காபிர்களை தங்களது பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். எவரேனும் அவர்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி அவ்வாறு செய்தால், அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எவ்விதத்திலும் சம்பந்தமில்லை.' (03:28)
இதன் படி 'தகிய்யா' எனும் ஈமானை மறைத்தலானது, பிடிவாதக் குணம் படைத்த அடக்கு முறையாளர்கள் மற்றும் வெறிபிடித்த கூட்டத்தாரிடமிருந்து தனது உயிர், உடைமை மற்றும் மரியாதை என்பவற்றுக்கு ஆபத்து வருவது நிச்சயம் எனவும் ஈமானை வெளிக் காட்டுவதால் குறிப்பிடத்தக்க எந்தப் பிரதிபலனும் கிடைக்காது என்றும் உணரப்படும் போது மாத்திரமே ஆகுமான தென்பது குறிப்பிடப்படுகின்றது. இது போன்ற இடங்களில், ஒருவர் வீணாகத் தன் உயிரைக் கொடுத்து, தன் மூலமாக சமூகம் பெறவுள்ள பயன்களை இல்லாது செய்து விடக்கூடாது.
இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் குறிப்பிடுகின்றார்கள். 'தகிய்யா என்பது முஃமினுடைய பாதுகாப்புக் கேடயமாகும்.' (வசாயில், பாக.11, பக்.461)
கேடயம் என்ற வாசகம் மிகவும் அழகானதாகும். எதிரிகளிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான கேடயமாக இங்கு 'தகிய்யா' வர்ணிக்கப்படுகின்றது.
ஹஸ்ரத் அம்மார் (ரழி) அவர்கள் தகிய்யா செய்து, பின் அதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடம் கூறிய போது, நபியவர்கள் அதனை ஆமோதித்த சம்பவம், வரலாற்றில் மிகவும் பிரபல்யமான நிகழ்வாகும். இதை அதிகமான குர்ஆன் விரிவுரையாளர்களும் வரலாற்றாசிரியர்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களும் தத்தமது நூற்களில் குறிப்பிட்டுள்ளனர். வாஹிதீ தனது அஸ்பாபுன்; நுஸூலிலும், தபரி, குர்துபி, ஸமஹ்ஷரி, பஹ்ருர்ராசி, நைஸாபூரி, பைழாவி போன்றோர் தமது பிரசித்தி பெற்ற அல்குர்ஆன் விரிவுரைகளில் சூரா நஹ்ல் 106ம் வசனத்தின் விளக்கவுரையின் கீழ் இதனைக் குறிப்பிடுகின்றனர்.
போர் வீரர்கள், போர்க்களத்தில் தம்மையும் தமது ஆயுதங்களையும் மறைத்துக் கொள்வதும் போரின் இரகசியங்களை எதிரிகள் அறிந்து விடாது மறைப்பதும் மனிதர்களது வாழ்வில் அவ்வப்போது நடைபெறும் சம்பவங்களாகும். இவை அனைத்தும் தகிய்யா வகையைச் சேர்ந்ததாகும். மொத்தத்தில் தகிய்யா அல்லது மறைத்தல் என்பது, வெளிப்படுத்துவதன் மூலம் பயன்பாடின்றி ஆபத்தே வரும் எனக் காணும் இடத்தில் மறைக்க வேண்டிய விஷயங்களை வெளிப்படுத்ததாது இரகசியம் பேணுவதைக் குறிக்கிறது. இது அறிவு ரீதியாகவும் மார்க்க ரீதியாக வும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நியதியாகும். ஷீயாக்கள் மாத்திர மன்றி, உலக முஸ்லிம்கள் அனைவருமே, அறிவு ஞானம் படைத்த மனிதர்கள் எல்லோரும் இதனை நடைமுறைப் படுத்து கின்றார்கள்.
விடயம் இவ்வாறிருக்க தகிய்யா என்பது ஷீயாக்களிடம் மட்டுமே காணப்படுகின்ற சர்ச்சைக்குரிய ஓர் அம்சம் எனக் காட்டி விமர்சிக்க முற்பட்டிருப்பது வியப்புக்குரியதாகும். ஆனால், இது அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் நபித் தோழர்களின் நடைமுறைகளிலும் மட்டுமன்றி உலகின் எல்லா அறிஞர்களிடத்திலும் காணப்படும் வழிமுறையாகும்.
தகிய்யா செய்வது சில இடங்களில் ஆகுமாக இருக்கின்ற அதேவேளை, வேறு சில இடங்களில் அது ஹராமாகவும் அமைகின்றது. இஸ்லாத்திற்கோ அல்குர்ஆனுக்கோ அல்லது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கோ, அதன் அமைப்புக்கோ களங்கம் அல்லது ஆபத்து ஏற்படும் நிலைமகள் தோன்றும் பட்சத்தில் தன் கொள்கையை வெளிப்படுத்துவதன் மூலம் தனக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகளைப் பற்றி கவனத்திற் கொள்ளக் கூடாது என்பது நமது நம்பிக்கையாகும். ஆசூரா தினத்தில் இமாம் ஹுஸைன் அலைஹிஸ் ஸலாம் செய்த அர்ப்பணிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததாகும். உமையா ஆட்சியாளர்கள் இஸ்லாமிய உம்மத்தின் அடிப்படைகளையே தகர்க்கலானார்கள். இமாம் ஹுஸைனின் எழுச்சியின் மூலம் உண்மை நிலை அம்பலமாகியது. இடம் பெறவிருந்த பேரழிவிலிருந்து முஸ்லிம் உம்மத் காப்பாற்றப் பட்டது.
இது பற்றிய தப்பான அபிப்பிராயங்களுக்குக் காரணம் என்னவெனில், ஷீயாக்களின் கோட்பாடுகள் பற்றிய போதுமான தெளிவு இன்மை அல்லது அவர்களின் எதிரிகள் சொல்கின்ற வற்றை ஆதாரமாகக் கொள்வது ஆகும். இது வரை தரப்பட்ட விளக்கம் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளப் போதுமான தாகும் என்று நம்புகின்றோம்.
அல்குர்ஆனும் ஸுன்னாவும் குறிப்பிடுகின்ற இபாதத்துகளை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என நாம் பூரணமாக நம்புகின்றேம். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலாக முக்கிமான தொடர்பு ஊடகமாகக் கருதப்படுகின்ற நாளாந்த ஐவேளைத் தொழுகை, ஈமானை வலுப்படுத்திக் கொள்ளவும் உளத் தூய்மையையும் இறையச்சத்தையும் வளர்த்துக் கொள்ள வும் மன இச்சைகளை வெல்லவும் சிறந்த சாதனமாகிய நோன்பு என்பன கட்டாயக் கடமைகளைச் சார்ந்ததாகும். ஹஜ், முஸ்லிம்களின் இறையச்சத்தை மெருகூட்டி, அவர்களிடையேயான சர்வதேச உறவைக் கட்டியெழுப்பக் கூடியதாகவும் முஸ்லிம்களின் கண்ணியத்துக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகின்றது. ஸக்காத், குமுஸ், நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுப்பதும், இஸ்லாத் திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக போர் புரிவோருக்கு எதிராகப் போராடுவதும் அடிப்படைக் கடமைகளில் உள்ளவையாகும்.
பிரஸ்தாப கிரியைகளின் நடைமுறை சம்பந்தப்பட்டட துணை விடயங்களில் நம்மிடம் ஏனைய மத்ஹபுளோடு கருத்து வேறுபாடு காணப்படலாம். இது இத்தகைய அம்சங்களில் அஹ்லுஸ் ஸுன்னாக்களின் நான்கு மத்ஹபுகள் மத்தியில் காணப்படும் கருத்து வேறுபாடுகளை ஒத்ததாகும்.
ஐவேளைத் தொழுகையையும் தனித்தனியாக அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதே ஏற்றமானதும் சிறப்பான தும் ஆகும். எனினும் ளுஹரையும் அஸரையும் அதே போல் மஃரிபையும் இஷாவையும் ஒன்றோடொன்று இணைத்து சேர்த்துத் தொழுவதும் ஆகுமானதாகும் என நாம் நம்புகின்றோம். இது, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழக்கூடிய மனிதர்களின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, இறை தூதரால் வழங்கப் பட்ட விசேஷ அனுமதியாகும் எனவும் நம்புகின்றோம்..
ஸஹீஹ் திர்மிதியில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடமிருந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது: 'பயமோ, மழையோ இல்லாத சந்தர்ப்பங்களில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், மதீனாவில் வைத்து, ளுஹர்-அஸர் தொழுகைகளையும், மஃரிப்-இஷா தொழுகைகளையும் சேர்த்துத் தொழுதார்கள். 'இதன்மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் நோக்கமென்ன?' என்று இப்னு அப்பாஸிடம் வினவப்பட்ட போது, 'நபிகளார், தமது உம்மத்தினர் சிரமப்படாமலிருக்க வேண்டும் என்பதை நாடியுள்ளார்கள்' எனப் பதிலளித்தார்கள் (ஸுனன் திர்மிதி, பாக.1,பக்.354, பாடம் 138 மற்றும் ஸுனன் பைஹக்கீ - பாக.3, பக்.167)
சமூக வாழ்வு மிகவும் சிக்கலான இந்தக் காலகட்டத்தில் குறிப்பாக அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் கடமை புரியும் ஊழியர்களும் அலுவலர்களும் தமது வேலைப் பளுவின் காரணமாக தொழுகைகளை அவற்றுக்குரிய நேரங்களில் தொழ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது, நாளடைவில் அவர்கள் தொழுகையை முற்றாக விட்டு விடுவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது. எனவே, தொழுகைகளை சேர்த்துத் தொழுவதற்கு நபியவர்கள் வழங்கியுள்ள அனுமதியை நடைமுறைப் படுத்துவதனூடாக, தொழுகையைத் தவறவிடாது பேணி வரும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
தொழுகையில் சுஜூது செய்யும் போது, மண் அல்லது மண்ணிலிருந்து முளைக்கின்ற ஆனால் உணவாகவோ, உடையாகவோ பயன்படுத்தப்படாத ஒன்றின் மீது நெற்றியை வைக்க வேண்டியது அவசியமாகும் என நாம் நம்புகின்றோம். இதன் காரணமாகவே, விரிப்புகளில் சுஜூது செய்வதை ஷீயாக்கள் ஜாயிஸாகக் கருதுவதில்லை. அத்துடன், சுஜூது செய்வதற்கு மிகவும் ஏற்றமுடையது மண் ஆகும். ஆகவே சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஷீயாக்கள் தூய மண்ணைச் சிறிய களியாகச் செய்து தம்மோடு வைத்துக் கொள்வர். தொழுகையின் போது அதன் மீது சுஜூது செய்வார்கள்.
இது பற்றி நபிகளாரின் பின்வரும் பொன் மொழியை ஆதாரமாகக் கொள்கிறோம்: 'எனக்கு பூமி சுஜூது செய்யும் இடமாகவும் தூய்மையானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது.' இந்த ஹதீஸில் வரும் மஸ்ஜித் எனும் பதம் சுஜூது செய்யும் தளத்தைக் குறிக்கின்றது. இந்த ஹதீஸ் அதிகமான கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. (புஹாரி, பாக.1, பக்.91 பாபுத் தயம்மம், நஸாயீ மண்ணின் மூலம் தயம்மம் செய்தல் எனும் பிரிவு, முஸ்னத் அஹ்மத் பாக.1, பக்.301) ஷீயாக்களின் பல கிரந்தங்களும் இதனைப் பதிவு செய்துள்ளன.
சில வேளை, இந்த ஹதீஸில் மஸ்ஜித் என்பதன் பொருள் ஸஜதா செய்யும் இடமல்ல எனவும் இது தொழுகையை ஒரே இடத்தில் மாத்திரம் நிறைவேற்றும் சிலருக்கு எல்லா இடமும் தொழுகைக்கு உகந்தது எனப் போதிக்க வந்தது எனவும் சிலர் முனையலாம்.
ஆனால், பின் வந்திருக்கும் தஹூரா என்பது தயம்மம் செய்யும் மண்ணைக் குறிக்கின்றது என்பதைக் கவனிக்கின்ற போது, மஸ்ஜித் என்பதன் பொருள் ஸஜதா செய்யும் இடமென்பது தெளிவாகின்றது. அதாவது, பூமியானது தூய்மையானதும், ஸஜ்தா செய்யும் இடமும் ஆகும் என்பதைக் குறிக்கின்றது. அத்துடன் அஹ்லுல்பைத் இமாம்களின் வழியாக வந்திருக்கும் அதிகமான ஹதீஸ்களில் மண்ணில் அல்லது அது போன்ற ஒன்றில் தான் தான் சுஜூது செய்ய வேண்டுமெனக் குறிப்பிடப்பட் டுள்ளமை போதுமான விளக்கமாகும்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களினதும் அஹ்லுல்பைத் இமாம்கள், ஏனைய உலமாப் பெருந்தகைகள், ஞானிகள், சுஹதாக்கள், பெருந்தகைகள் போன்றோரின் கப்றுகளைத் தரிசிப்பது முஸ்தஹப்பான ஒரு செயலாகும் என நாம் நம்புகின்றோம்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் புனித கப்றைத் தரிசிப்பதன் சிறப்புகளை அறிவிக்கும் பெருந்தொகையான ஹதீஸ்கள் ஷீயா-சுன்னா கிரந்தங்களில் உள்ளன. இவையனைத்தும் தனியே ஒன்று சேர்க்கப்பட்டால், பெரும் நூலுருப் பெற்றுவிடும். அல் கதீர் கிரந்தத்தில் பாக.5, 93 முதல் 207 வரையான பக்கங்களில் 'ஸியாரத்' செய்வது பற்றிய றிவாயத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
வரலாறு நெடுகிலும் இஸ்லாத்தின் பெரும் அறிஞர்களும் பொதுவாக எல்லாத் தரத்தையும் சேர்ந்த மக்களும் இவ்விடயத் திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டிருக்கின்றனர். மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களதும் ஏனைய இறைநேசர்களதும் கப்றுகளைத் தரிசிப்பதற்காகச் சென்றவர்களின் அனுபவங்கள் பற்றிய விளக்கங்களால் கிரந்தங்கள் நிரம்பிக்காணப்படுகின்றன. மொத்தத்தில், இந்த விடயத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
அதேவேளை, கப்றுகளைத் தரிசித்தல் என்பதற்கு வணங்குவது என பொருள்கொள்ளக் கூடாது. வணக்கம், அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமானதும் குறிப்பானதும் ஆகும். ஆனால், கப்றுகளை தரிசிப்பதன் மூலமாக இறைநேசர்களைக் கண்ணியப் படுத்துவதோடு அல்லாஹ்விடம் மன்னிப்பையும் அருளையும் பெற அவர்களின் சிபார்சைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அடைந்து கொள்ளவும் முடிகின்றது.
பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களும், பல சந்தர்ப்பங்களில் கப்றுகளைத் தரிசிப்பதற்காக, 'ஜன்னதுல் பகீஉ'க்கு அடிக்கடி வந்து போகிறவராகவும் கப்றுவாசிகளுக்கு ஸலாம் சொல்பவராகவும் இருந்தார்கள் என்பதாக ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுப்புகள், முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ, முஸ்னத் அஹ்மத், திர்மிதி, பைஹகி போன்ற கிரந்தங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இஸ்லாமிய சட்டக்கலையில் 'முத்ஆ' எனும் பெயரில் பிரபல்யம் பெற்றிருக்கும் தற்காலிக திருமணம் மார்க்கத்தில் ஆகுமான சட்டபூர்வமான ஓர் அம்சமாகும் என்பது நமது நம்பிக்கையாகும். இதன்படி திருமணம் இருவகைப்படும். ஒன்று, நிரந்தரத் திருமணம். இது, திருமண பந்தத்தின் காலம் வரையறுக்கப்படாததாகும். இரண்டு, தற்காலிக திருமணம். இதன் காலம் இரு தரப்பினரதும் அங்கீகாரத்தோடு வரையறை செய்யப் பட்டிருக்கும்.
இது தற்காலிக திருமணமாக இருந்த போதிலும், பல விடயங்களில் நிரந்தரத் திருமணத்தை ஒத்ததாகும். மஹர் கொடுத்தல், பெண்ணின் சுதந்திரம் முதலான நிபந்தனைகள் கவனிக்கப்படுவதோடு, திருமண பந்தத்திலிருந்து இருவரும் விலகிக் கொள்ளும் போது பெண் இத்தா இருப்பதும் அவசியமாகும். அத்தோடு இத்திருமணத்தின் மூலமாகப் பிறக்கின்ற குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு போன்றன, நிரந்தர திருமணத்தின் மூலமாகப் பிறக்கின்ற குழந்தைகளின் நிலையை விட எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. ஆக, முத்ஆ என்பது அதன் அனைத்து பரிமாணங்களையும் அவதானிக்கும் போது அங்கீககரிக்கப்பட்ட ஒரு திருமண முறையே என்பது புலனாகிறது.
ஆயினும் தற்காலிகத் திருமணமானது, சில விடயங்களில் நிரந்தரத் திருமணத்திலிருந்து வித்தியாசப்படுகிறது. தற்காலிக திருமணத்தில், கணவன் மனைவிக்கு செலவு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவருக்கு மற்றவரிலிருந்து வாரிசு உரிமையும் கிடையாது. எனினும், இருவர் மூலமாகவும் பிறக்கின்ற பிள்ளைகள், தமது பெற்றோரிடமிருந்து வாரிசுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்திருமண முறை பற்றி அல்குர்ஆன் கூறுவதாவது:
'நீங்கள் முத்ஆ செய்யும் பெண்களுக்கு கட்டாயமாக அவர்களது மஹரைக் கொடுத்து விடுங்கள்.' (04: 24)
அநேகமான அல்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களும் இவ்வசனம் முத்ஆ சம்பந்தமானதே என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தப்ஸீர் தபரீயில் இவ்வசனத்துடன் தொடர்பான அநேக அறிவிப்புகள் கூறப்பட்டுள்ளன. அவையனைத்தும் மேற்கூறப்பட்ட வசனம் முத்ஆ சம்பந்தமானதே என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஏராளமான நபித்தோழர்களும் இதனை ஆமோதித்துள்ளார்கள். (தப்ஸீர் தபரீ, பாக.5, பக்.9)
தப்ஸீர் அத்துர்ருல் மன்ஸூரிலும், சுனன் பைஹகீயிலும் இது சம்பந்தமான பல ஹதீஸ்கள் வந்துள்ளன. (அத்துர்ருல் மன்ஸூர், பாக.2, பக்.140, சுனன் பைஹகி, பாக.7, பக்.206)
மேலும், ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னத் அஹமத் மற்றும் பல கிரந்தங்களிலும் இத் திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்தில் நடைமுறையிலிருந்ததாக அறிவிக்கும் பல ஹதீஸ்கள் காணப்படு கின்றன. (முஸ்னத் அஹ்மத், பாக.4, பக்.436, ஸஹீஹ் புஹாரி, பாக.7, பக்.16, ஸஹீஹ் முஸ்லிம், பாக.2, பக்.1022 பாபு நிகாஹில் முத்ஆ) இதற்கு மாற்றமான கருத்தைத் தொனிக்கும் றிவாயத்துகளும் இல்லாமல் இல்லை.
அஹ்லுஸ் சுன்னா மார்க்க சட்டநிபுணர்களில் பலர், முத்ஆ திருமணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் இருந்ததாகவும், பின் மாற்றப்பட்டு விட்டதாகவும் நம்புகின்றனர். மேலும் பலர், இச்சட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் கடைசி நாள் வரைக்கும் இருந்ததாகவும், பின் அதை இரண்டாம் கலீபா அவர்கள் மாற்றி விட்டதாகவும் கூறுகின்றனர். கலீபா அவர்கள் பின்வருமாறு கூறியதாகப் பதியப்பட்டுள்ளது:
'இரண்டு முத்ஆக்கள் நபிகளாரின் காலத்தில் இருந்தன. அவ்விரண்டையும் செய்வதை நான் தடுக்கிறேன். அவற்றை செய்வோருக்கு தண்டனையும் வழங்குவேன். அவை பெண்களின் முத்ஆவும், ஹஜ்ஜின் முத்ஆவுமாகும்.'
இதே பொருளைக் கொண்டுள்ள ஹதீஸ், சுனன் பைஹகீ- பாக.7, பக்.206 இலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முத்ஆ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்திலும், முதலாம் கலீபாவின் காலத்திலும், இரண்டாம் கலீபாவின் ஆட்சிக் காலத்தின் ஒரு பகுதியிலும் ஹலாலாக இருந்து நடைமுறைப் படுத்தப்பட்டு வந்ததாகவும், பின் இரண்டாம் கலீபா, தனது வாழ்நாளின் கடைசிப் பகுதியில் அதனைத் தடைசெய்ததாகவும் அறிவிக்கும் சுமார் 25 ஹதீஸ்களை, 'அல்கதீர்' கிரந்தத்தின் ஆசிரியர், அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க கிரந்தங்களில் இருந்து தொகுத்துள்ளார். (அல்கதீர்- பாக.3, பக்.332)
அஹ்லுஸ் சுன்னாக்களின் அறிஞர்களுக்கு மத்தியில், ஏனைய சட்டங்களில் போன்று இதிலும் கருத்துவேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர், இது நபியுடைய காலத்திலேயே மாற்றப்பட்டு விட்டதாகவும், சிலர், நபியுடைய காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்து, இரண்டாம் கலீபாவின் காலத்திலேயே மாற்றப்பட்ட தாகவும் கூறுகின்றனர். இன்னும் சிறு தொகையினர், அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றனர். பிக்ஹ் சட்டங்கள் சம்பந்தமாக இத்தகைய கருத்து வேறுபாடுகள் பொதுவாகக் காணப்படும் ஓர் அம்சமாகும்.
அதேவேளை, ஷீயா மார்க்க அறிஞர்கள் இவ்விடயத்தில் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதாவது, இத்திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தது. நபியவர்கள் அதனைத் தடைசெய்யவில்லை. மார்க்கச் சட்டங்களில் ஒன்றாகிய அதனை, நபிகளாருக்குப் பின் மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை என நாம் நம்புகின்றோம்.
இத்திருமண முறை, அதன் ஒழுங்குகளுடன் சமூகத்தில் நடைமுறைப்படுத்தப் படுமானால் அல்லது தவறாகப் பிரயோகிப் பதில் இருந்து தவிர்க்கப்படுமானால் நிரந்தரத் திருமணம் செய்வ தற்கு சக்தியற்றும், அதேவேளை உணர்ச்சிகளுக்குக் கட்டுப் பட்டும் பாவங்களில் தவறிவிழும் இளைஞர்களின் சீர்கேடுகளுக்கு சிறந்த பரிகாரமாக அமையும். அவ்வாறே வியாபாரங்களுக்காக, கல்வி கற்றலுக்காக, வேறு தேவைகளுக்காக தூர தேசங்களுக்குச் சென்று வாழ்பவர்கள், தவறுகளிலும் பாவங்களிலும் மூழ்காதிருப் பதற்கான பாதுகாப்பை இத்திருமணம் வழங்க முடியும். குறிப்பாக பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக இளைஞர் யுவதிகளின் திருமண வயது அதிகரித்துக் காணப்படும் இப்போதைய கால கட்டத்தில் இச்சைகளைத் தூண்டும் விவகாரங்களும் அதிகரித்தே உள்ளன. எனவே இதற்கான தீர்வாக இச்சட்டரீதியான திருமண முறையை அங்கீகரிக்காது விடுவதன் மூலம் ஒழுக்கக் கேடும் வேறு பல சீர்கேடுகளும் பரவலாகுவதற்கு வழிவகுக்கப் படும் என்பதில் ஐயமில்லை.
அதேவேளை, இஸ்லாம் அனுமதித்துள்ள இச்சட்டத்தை தீய வழியில் பிரயோகிப்பதையும் பெண்களை இழிவாகக் கருதுவதையும் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டவர்களினால் இது மாசுபடுத்தப் படுவதையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. சிலர் தவறு செய்கின்றார்கள் என்பதற்காக, இச்சட்டத்தை மாற்ற நினைப்பதும் குறைகூறுவதும் தவறானதாகும். எனவே, தவறு செய்பவர்களைத் திருத்த முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், மார்க்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு முயலக் கூடாது என்பது நமது நிலைப்பாடாகும்.
ஷீயாக்களின் வரலாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதை அதிகமான ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அவற்றில் சில:
'நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்காரியங்களும் செய்தார்களோ, அவர்கள் தான் படைப்பினங்களில் மிகவும் சிறந்தவர்கள்.' (98: 07)
மேற்படி திருமறை வசனத்திற்கு விரிவுரை எழுதியவர்கள், அண்ணல் நபிகளார் கூறிய ஒரு ஹதீஸை எடுத்தாள்கின்றனர். அதன் பிரகாரம், 'இந்த ஆயத்தில் குறிக்கப்பட்டுள்ள மக்கள் அலீயும் அவரது நேசர்களுமே' என அன்னார் மொழிந்துள்ளார்கள். (இந்த ஹதீஸில் நேசர்கள் என மொழிபெயர்க்கப் பட்டுள்ள சொல்லுக்கு அரபு மொழியில் ஷீஆ என்ற பதமே இறை தூதரால் பிரயோகிக்கப் பட்டுள்ளது.)
மேலும் பிரசித்தி பெற்ற அல்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் சுயூதி, தனது அத்துர்ருல் மன்ஸூர் எனும் கிரந்தத்தில், இப்னு அஸாகிர் வழியாக அறிவிக்கின்றார்கள்: 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள், 'ஒரு நாள் நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது, அப்பக்க மாக ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் வந்தார்கள். அவர்களைக் கண்டதும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள்:
'எனது உயிர் எவன் வசமிருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக இவரும், இவரது (ஷீயா) கூட்டத்தினருமே மறுமை நாளின் வெற்றியாளர்கள்.'
அதன் பின், மேற்கூறப்பட்ட வசனம் இறங்கியது. இந்நிகழ்வுக்குப் பின்னர், ஹஸ்ரத் அலீ அவர்கள் நபிகளாரின் சபைக்கு வரும்போதெல்லாம் 'படைப்பினங்க ளில் மிகவும் சிறந்தவர் வருகின்றார்' என்றே நபித்தோழர்கள் கூறினார்கள்.' (அத்துர்ருல் மன்ஸூர் - பாக 6 - பக் 379)
இதே கருத்தை இப்னு அப்பாஸ் (ரழி), அபூபர்சஹ், இப்னு மர்தவிய்யா, அதிய்யா அவ்பி போன்றோர் சிறு வித்தியாசத் துடன் அறிவித்துள்ளனர்.
இதன் படி, ஷீயா எனும் பெயரை இமாம் அலீயுடன் தொடர்பு பட்டவர்களுக்கு சூட்டுவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்திலிருந்தே தோன்றி வழக்கில் இருந்து வந்துள்ளது என்பதை அறிய முடிகின்றது. நபியவர்களே இப்பெயரைச் சூட்டியுள்ளார்கள் என்பது இதன் மற்றொரு சிறப்பாகும். மாறாக, இது கலீபாக்களின் காலத்திலோ, சபவிய்யாக்களின் காலத்திலோ உருவானதல்ல.
இமாம் அலீயைப் பின்பற்றுபவர்களுக்கு சில சிறப்பியல்புகள் இருக்கின்றன. இமாம் அலீ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது விசேட கண்காணிப்பின் கீழிருந்தமையே இதற்குக் காரணமாகும்.
நாம் ஏனைய மத்ஹபுகளைப் பின்பற்றுவோருக்கு உரிய மரியாதையை வழங்குகின்றோம். அவர்களுடன் ஒரே வரிசையில் நின்று வணக்கத்தில் ஈடுபடுகின்றோம். ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் சந்தித்துக் கூடி ஹஜ்ஜை நிறைவேற்றுகிறோம். இஸ்லாத் தோடு சம்பந்தப்பட்ட பொதுவான விவகாரங்களில் ஒத்துழைக் கின்றோம். அதே வேளை இமாம் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்களைப் பின்பற்றுகின்ற அவரது ஷீயாக்கள் பல்வேறு சிறப்பம் சங்களைக் கொண்டவர்கள் எனவும் அண்ணல் நபியவர்களின் தனிப்பட்ட கவனத்தையும் கரிசனையையும் பெற்றிருந்தவர்கள் எனவும் நாம் நம்புகின்றோம். நாம் இந்த சிந்தனைப்; பிரிவைத் தெரிவு செய்ய இதுவே காரணமாகும்.
ஷீயாக்களை எதிர்க்கும் சிலர், அப்துல்லாஹ் இப்னு சபா எனும் ஒருவருடன் இந்த மத்ஹபைத் தொடர்பு படுத்துவதற்கு முனைகின்றனர். அடிப்படையில் யஹூதியாக இருந்து பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அப்துல்லாஹ் இப்னு சபா என்ப வரையே ஷீயாக்கள் பின்பற்றுவதாகக் கூறுவார்கள். இது மிகவும் வியப்புக்குரிய ஒரு கருத்தாகும். ஷீயாக்களின் அனைத்து கிரந்தங் களையும் ஆய்வுசெய்கின்ற போது, அவர்கள் இப்னு சபாவுடன் எவ்வகையிலும் தொடர்புபட்டவர்களல்ல என்பதை அறிய முடியும். அத்துடன், ஷீயாக்களின் றிஜால் சம்பந்தப்பட்ட எல்லா நூற்களும் (குத்புர் ரிஜால்), அப்துல்லாஹ் இப்னு சபா என்பவரை வழிகெட்ட மனிதரெனக் குறிப்பிடுகின்றன. சில அறிவிப்புகளின் பிரகாரம் இமாம் அலீ அலைஹிஸ் ஸலாம், அவன் முர்தத் என்பதால் அவனைக் கொல்லுமாறு கட்டளையிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு, வரலாற்றில் அப்துல்லாஹ் இப்னு ஸபா பற்றிய தகவல்கள் நூறு வீதம் சந்தேகத்துக்கிடமானவையாகவே உள்ளன. சில ஆய்வாளர்களின் ஆய்வு முடிகளின் படி இப்னு சபா என்பவர் வெறுமனே கட்டுக் கதைப் பாத்திரம் ஆவார். அல்லாமா அஸ்கரீ யாத்துள்ள 'அப்துல்லாஹ் இப்னு ஸபா' பற்றிய ஆய்வு நூலில், யதார்த்தத்தில் அப்படி ஒருவர் உயிர் வாழவில்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிறுவியுள்ளார். அவன் ஒரு கற்பனை மனிதன் என்பதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் குறைந்தது ஏனைய ஆய்வாளர்களின் படி அவன் வழிகெட்ட ஒருவனாவான். நாமே மறுத்துரைக்கும் ஒருவர் நமது மத்ஹபை உருவாக்கினார் எனக் கதை கூறுவது எவ்வளவு அபத்தமானது.
ஷீயாக்களின் மத்திய தளமாக ஈரான் இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டில், பல மத்திய இடங்களை அது கொண்டிருந்தது. அவற்றில் கூபா, எமன், மதீனா என்பவை முக்கியமானவை. சிரியாவில் ஹாசிமீக்களுக்கு எதிரான உமையாக்களின் கடுமையான பிரசாரம் காணப் பட்ட போதிலும் அங்கும் பல மத்திய நிலையங்கள் காணப்பட்டன. எவ்வாறிருப்பினும் ஷீயாக்களின் பரம்பல் ஈராக் தேசத்தில் இருந்ததை விட அதிகமாக வேறு எங்கும் காணப்படவில்லை.
பரந்து விரிந்த எகிப்திலும் ஷீயாக்களின் ஒரு குழுவினர் எப்போதும் இருந்து வந்தனர். பாத்திமீக்களின் கிலாபத் இடம்பெற்ற காலத்தில் ஷீயா பாரம்பரியங்களைப் பின்பற்றுகின்ற ஒருவரது கையிலே தான் ஆட்சியதிகாரம் கூட இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உமையாக்களுடைய ஆட்சியில், சிரியாவில் வாழ்ந்த ஷீயாக்கள் சொல்லொணாத கொடுமை களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். அப்பாசியரு டைய ஆட்சியிலும் இந்நிலையே தொடர்ந்தது. அதிகமானோர் சிறைச்சாலைகளில் தமது உயிர்களை இழந்து 'ஹீதுகளாயினர். சிலர், இக்கொடுமை களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கிழக்குத் திசை நோக்கிச் சென்றனர். மேற்குத் திசையில் எகிப்துப் பக்கமாகச் சென்றோரில் இத்ரீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஹஸன் குறிப்பிடத்தக்கவராவார். பின் அங்கிருந்து அவர் மொரோக்கோவிற்குச் சென்றார். மொரோக்கோவிலிருந்த ஷீயாக்களின் உதவியுடன் அங்கு அவர் உருவாக்கிய அரசாட்சி 'இத்ரீஸீகளின் ஆட்சி' என வழங்கப்பட்டது. இது ஹிஜ்ரி 2ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து, ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டின் கடைசி வரை நீடித்திருந்தது.
எகிப்திலிருந்த ஷீயாக்கள், பாத்திமா நாயகியின் மகனான இமாம் ஹுஸைனின் வழித் தோன்றல்களாவர். எகிப்தில் ஷீயாக்களுக்கென பிரத்தியேக அமைப்பொன்று இருக்க வேண்டுமென்ற மக்களது ஏகோபித்த கருத்தினடிப்படையில் ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டில் உத்தியோக பூர்வமாக பாத்திமீக்களின் ஆட்சியை உருவாக் கினர். கெய்ரோ நகரத்தையும் அவர்களே நிர்மாணித்தனர். பாத்திமி கலீபாக்கள் மொத்தமாக 14 நபர்களாவர். அவர்களில் பத்துப் பேர் எகிப்தில் ஆட்சி செலுத்தினர். சுமார் மூன்று நூற்றாண்டுகள் எகிப்திலும் ஆபிரிக்காவின் ஏனைய பகுதிகளிலும் ஆட்சி புரிந்துள்ளனர். அல்அஸ்ஹர் பள்ளிவாசலும் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகமும் அவர்கள் மூலமாகவே நிர்மாணிக்கப் பட்டன. (தாயிரத்துல் மஆரிப் - தெஹ்ஹொதா - தாயிரத்துல் மஆரிப் - பரீத் வுஜ்தீ)
தற்காலத்தில் உலகின் பல பாகங்களிலும் ஷீயாக்கள் வாழ்ந்து வருகின்றனர். சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்திலும் அதிகமான ஷீயாக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏனைய மத்ஹபுகளைக் சேர்ந்தோருடன் சுமுகமான உறவு அங்கு காணப்படுகின்றது.
முஸ்லிம்களின் விரோதிகள், ஷீயாக்களுக்கும் ஏனைய மதஹபுகளைச் சேர்ந்த சகோதரர்களுக்கு மிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்கள் மத்தியில் குரோதம், கலவரம் என்பவற்றைத் தூண்டி அதன் மூலம் முஸ்லிம்களைப் பலவீனப்படுத்தவும், முஸ்லிம்களது பலவீனத்தில் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவும் முனைந்து வருகின்றனர்.
குறிப்பாக நமது யுகத்தில் இஸ்லாம், கீழைத்தேய- மேலைத்தேய பேராதிக்கங்களுக்கு முன்னால் மாபெரும் சக்தியாக வளர்ந்து சக்தி பெற்று வருகின்றது. சடவாத அமைப்புகளிடம் நிராசை யுற்றிருக்கும் மக்களைத் தன் பக்கம் ஈர்த்தெடுக்கின்றது. முஸ்லிம்களின் சக்தியையும் இஸ்லாத்தின் வேகப் பரம்பலையும் கண்டு அச்சமுறும் எதிரிகள், முஸ்லிம்களிடையே மத்ஹப் ரீதியான பிரச்சினைகளை உருவாக்கி, அதன் மூலம் அவர்களைப் பிளவு படுத்தி விட முனைகின்றனர்.
எனவே, அனைத்து இஸ்லாமிய மத்ஹபுகளை யும் பின்பற்றக் கூடியவர்கள், இது பற்றிய விழிப்புணர்ச் சியுடனும் தூரதிருஷ்டியுடனும் செயற்பட்டால் பயங்கர மான விளைவுகளைத் தரும் இச்சதிகளை முறியடிக்க முடியும்.
ஷீயாக்கள் மத்தியிலும் அஹ்லுஸ் ஸுன்னாக்கள் மத்தியில் காணப்படுவது போன்று பல பிரிவுகள் காணப்படுகின்றன. பன்னிரண்டு இமாம்களைப் பின்பற்றக் கூடிய 'இஸ்னாஅஷரிய்யாக்கள்' என அழைக்கப் படுவோரே அதிகமாகக் காணப்படுகின்றனர். உலக முஸ்லிம்களின் மொத்த தொகையில் நான்கிலொரு பகுதியாக ஷீயாக்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அஹ்லுல் பைத்துகளைப் பின்பற்றக் கூடியவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறிய அதிகமான ஹதீஸ்களை இமாம்களின் மூலமாக அறிவித்துள்ளனர். அதே போல் ஹஸ்ரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்தும், ஏனைய இமாம்களிடமிருந்தும் கூடுதலான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். அவை, ஷீயாக்களின் மார்க்க சட்டத்தைத் தொகுப்பதற்கான அடிப்படை மூலாதாரங் களாக விளங்குகின்றன.
'குதுபுல் அர்பஆ' எனப்படும் நான்கு கிரந்தங்கள் அவற்றில் முக்கியமானவை. அவையாவன, அல் காஃபீ, மன் லா யஹ்ளுருஹுல் பகீஹ், தஹ்தீப், இஸ்திப்ஸார் ஆகியவை யாகும். இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்கள் ஒவ்வொன்றின தும் ஏற்றுக் கொள்ளும் தன்மை அவற்றினது அறிவிப்பாளர்களின் வரலாற்றை யும் வாழ்வையும் ஆதாரமாகக் கொண்டே தர நிர்ணயம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அறிவிப்பாளரது வாழ்க்கை மார்க்கத்துடன் முரண்படாததாகவும் ஒழுக்கம் மிக்கதாக வும் இருக்கும் பட்சத்தில் குறித்த ஹதீஸ் நமபத் தகுந்தது (ஸஹீஹ்) எனவும் இல்லையெனில் மஷ்கூக் (சந்தேகத்திற்குரியது), ழஈப் (பலவீனமானது) எனவும் தீர்மானிக்கப்படும். றிஜால் பற்றிய கிரந்தங்களில் ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.
ஷீயாக்களது கிரந்தங்களுக்கும் சுன்னாக்களது கிரந்தங் களுக்குமிடையே சில வித்தியாசங்கள் உள்ளன. புஹாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களைத் தொகுத்தவர்கள் ஸஹீஹானவை எனத் தரப்படுத்தப் பட்டவற்றையே கோர்வை செய்தார்கள். அதனால் அவற்றில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ஹதீஸையுமே அஹ்லுஸ் சுன்னாக்களின் கொள்கையை விளங்கிக் கொள்வதற்குப் பயன் படுத்த முடியும். (மேலதிக விபரங்களுக்கு ஸஹீஹ் முஸ்லிம், பத்ஹுல்பாரீ ஃபீ ஷரஹில் புஹாரீ முன்னுரையைப் பார்க்கவும்)
ஆனால், ஷீயாக்களைப் பொறுத்தவரை, பொதுவாக அஹ்லுல் பைத் பாரம்பரியத்துடன் சம்பந்தப்பட்ட றிவாயத்துகளை முதலில் கிரந்தங்களில் கோர்வை செய்துள்ளனர். அவற்றில் சரியானவற்றையும், பலவீனமானவற்றையும் அறிவதை இல்முர் ரிஜால் (ஹதீஸ் அறிவிப்பாளர்களின் நிலைகளை அறிவதற்கான அறிவு) பற்றிய அறிஞர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஷீயாக்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் இரண்டு முக்கிய கிரந்தங்கள் உள்ளன. இமாம் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்களின் பொன்மொழிகள் அடங்கிய நஹ்ஜுல் பலாகா முதலா வதாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மர்ஹூம் சரீப் ரிழா என்பவரால் தொகுக்கப்பட்ட இக்கிரந்தம், இமாம் அலீயின் குத்பாக்கள், கடிதங்கள், பொன்மொழிகள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உயர் இலக்கண இலக்கிய நெறிகளுடனும் அழகிய சொல்லமைப்புகளுடனும் அமைந்துள்ள இமாம் அலீயின் இப்பொன்மொழிப் பேழை, அதை வாசிப்போர் எம்மதத் தையும் எந்த மத்ஹபையும் சேர்ந்தவராக இருப்பினும் அவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கருத்தாழமிக்கதாகக் காணப்படுகின்றது. ஏகத்துவம், இம்மை-மறுமை, நல்லொழுக்கம், அரசியல், சமூகவியல் என பல்வேறு விடயங்கள் தொடர்பான தெளிவான கருத்துகளை அது உலகுக்கு வழங்குகின்றது. முஸ்லிம்கள் மட்டுமன்றி, ஏனைய மதத்தவர்களும் படித்துப் பயன்பெறும் அற்புதக் கருத்துகளை அது கொண்டிருக்கின்றது.
நஹ்ஜுல் பலாகாவை அடுத்து, முக்கியத்துவம் பெறும் கிரந்தம், ஷீயாக்களின் நான்காவது இமாமான இமாம் அலீ இப்னு ஹுஸைன் அஸ்ஸஜ்ஜாத் செய்னுல் ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆத் தொகுப்பான, 'சஹீபதுஸ் ஸஜ்ஜாதிய்யா' ஆகும். இது, சிறந்த கருத்தாழமிக்க துஆக்களின் தொகுப்பாகும். உண்மையில், இது நஹ்ஜுல் பலாகாவில் இருக்கும் குத்பாக்களின் பாணியையே வேறொரு விதத்தில் தெளிவுபடுத்துகின்றது. அதன் ஒவ்வொரு வசனமும் மனிதர்களுக்குப் புதிய கருத்துகளை அறிமுகப் படுத்துகின்றது. அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் முறை, அல்லாஹ்வுடன் முனாஜாத் செய்யும் ஒழுங்கு என்பவற்றையும் கற்றுத்தருகின்றது. அதிலுள்ள துஆக்கள், உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியை யும், ஆரோக்கியத்தையும் வழங்கக் கூடிய சிறப்பியல்பு கொண்டவையாக அமைந்துள்ளமை அதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
ஷீயாக்களின் அதிகளவிலான ஹதீஸ்கள், ஐந்தாம், ஆறாம் இமாம்களான இமாம் பாக்கிர் அலைஹிஸ் ஸலாம், இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் ஆகியோர் வழியாகவும் எட்டாவது இமாமான இமாம் ரிழா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களது காலத்திலேயே, உமையாக்களதும், அப்பாசியர்களதும் கொடுமைகள் ஓரளவு தணிந்திருந்தன. இதனால், ஒப்பீட்டளவில் சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் செயற்படுவது இவர்களுக்குச் சாத்திய மாயிற்று.
இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடமிருந்தே அதிகமான ஹதீஸ்கள் அறிவிக்கப் பட்டுள்ளமையால், ஷீயாக்களின் மத்ஹப், ஜஃபரியா மத்ஹப் என்று அழைக்கப்படுகின்றது. இமாமவர்கள், அபூஹனீபா, மாலிக் உட்பட சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஹதீஸ், பிக்ஹ், மற்றும் பல பாட போதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள்.
இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் அவர்களைப் பற்றி, ஹனபி மத்ஹபின் ஸ்தாபகர் இமாம் அபூஹனீபா அவர்கள் குறிப்பிடுவதாவது:
'ஜஃபர் இப்னு முஹம்மத் -அலைஹிஸ்ஸலாம்- அவர்களை விட சிறந்த மார்க்க சட்டமேதை எவரையும் நான் கண்டதில்லை.' (தத்கிரதுல் ஹுப்பாழ், பாக.1, பக்.166)
மாலிகீ மத்ஹபைத் தோற்றுவித்த இமாம் மாலிக் இப்னு அனஸ் அவர்கள் குறிப்பிட்டார்கள், 'நான் சிறிது காலம் இமாம் ஜஃபர் இப்னு முஹம்மத் அஸ்ஸாதிக் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் அடிக்கடி சென்று வந்தேன். நான் செல்லும் போதெல்லாம் அவர்கள் தொழுது கொண்டிருப்பார் அல்லது நோன்பாளியாக இருப்பார் அல்லது குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பார். இம்மூன்றுமல்லாத வேறொரு நிலையில் நான் அவர்களைக் காணவில்லை. இமாமவர்களை விட அறிவிலும் வணக்கத்திலும் உயர்ந்த ஒருவரை எவரும் கண்டிருக்கவோ கேள்விப்பட்டிருக்கவோ மாட்டார்கள்.' (தஹ்தீபுத் தஹ்தீப், பாக.2, பக்.104)
இது சிறியதொரு தொகுப்பாக இருப்பதால், ஏனைய இமாம்களைப் பற்றிய இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுக்களைக் குறிப்பிடுவதைத் தவிர்ந்து கொள்கின்றோம்.
இஸ்லாமிய அறிவுத் துறை வளர்ச்சிக்கு ஷீயாக்கள் அளப்பரிய தொண்டாற்றியுள்ளனர். இஸ்லாமிய அறிவு வளர்ச்சிக்கு, ஷீயாக்களிடமிருந்தே பாரிய பங்களிப்பு வழங்கப் பட்டது எனக் கூறுவோரும் உள்ளனர். இதை நிரூபிக்கும் பல ஆய்வு நூற்களை எழுதியுமுள்ளனர். எவ்வாறாயினும் அறிவுத்துறை வளர்ச்சியின் தோற்றத்தில் ஷீயாக்கள் முக்கிய பங்கு வகித்தார்கள் என்பது உண்மையாகும்.
இஸ்லாமிய அறிவு, மற்றும் இஸ்லாமிய கலைகள் தொடர்பாக ஷீயா அறிஞர்களால் எழுதப்பட்டுள்ள பெருந்தொகையான நூற்கள், இதற்கு சிறந்த சான்றாக விளங்குகின்றன. இவை, பிக்ஹு, தப்ஸீர், உசூல், உலூமுல் குர்ஆன், இல்முல் கலாம் உள்ளிட்ட பல துறைகளையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன. இவற்றில் அதிகமானவை, இன்றும் உலகின் பல வாசிகசாலைகளில் ஆய்வுக்கும் வாசிப்புக்குமென பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.
ஷீயா அறிஞர்களால் எழுதப்பட்ட அனைத்து நூற்களின் பெயர்களையும் அட்டவணைப்படுத்தி 'அல் தரீஆ இலா தஸானீபிஷ் ஷீஆ' எனும் பெயரில் கோர்வை செய்து வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 68 ஆயிரம் கிரந்தங்கள் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. 26 பாகங்களில் வெளிவந்துள்ள இந்நூலை ஆகா புஸுர்க் தெஹ்ரானீ எனும் பிரபல்யமான ஷீயா அறிஞர் தொகுத்துள்ளார். இவ்வட்டவணை முந்திய பத்தாண்டு வரை உரியதாகும். அக்காலப்பகுதிக்குரிய அச்சுநூற்கள் மாத்திரமன்றி, கையேட்டுப் பிரதிகளும் தொகுக்கப்பட்டு, அவை தற்போது அச்சுருப் பெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இப்பணி பாரியளவில் தொடர்ச்சியாகமுன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
உண்மை, நம்பிக்கை என்பன இஸ்லாத்தின் முக்கிய தூண்களாகும்.
'அல்லாஹ் கூறுகின்றான், இது உண்மையாளர் களுக்கு அவர்களது உண்மை, பயனளிக்கக் கூடிய நாளாகும்.' (05:119)
அல்குர்ஆன் வசனங்களில், மறுமை நாளில் கொடுக்கப் படும் அடிப்படைப் பயன்பாடு அவர்களது உண்மைச் செயலுக்கான கூலியாகும் என்ற கருத்து குறிப்பிடப்படுகின்றது. அதாவது, ஈமான், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கை உட்பட, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உண்மையைப் பேணி வருவது இன்றியமையாததாகும்.
'உண்மையாளர்களுக்கு, அவர்களது உண்மை யின் காரணத்தால் அல்லாஹ் நற்கூலி வழங்குகிறான்.' (33:24)
எனவே, மேற்குறிப்பிடப்பட்டது போன்று, முஸ்லிம்கள் தமது வாழ்நாள் முழுவதும், பாவங்களை விட்டு தூய்மையானவர்களுடனும் உண்மையாளர்க ளுடனும் இருப்பது அவசியமாகும்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ் வைப் பயந்து கொள்ளுங்கள். இன்னும் உண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்.' (09:119)
எந்த ஒரு விடயத்தையும் உண்மையைக் கொண்டே நுழைந்து, உண்மையைக் கொண்டே வெளியேறுமாறு அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பணிப்பதிலிருந்து, உண்மையின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.
'என் இறைவனே! என்னை உண்மையின் பிரவேசமாக பிரவேசிக்க வைப்பாயாக. இன்னும் உண்மையான வெளியேற்றுதலாக என்னை வெளியேற்றி வைப்பாயாக என்று (நபியே!) நீர் கூறுவீராக.' (17:80)
அல்லாஹ்வின் புறமிருந்து எந்தவொரு நபியும் தனது அடிப்படைப் பணியில் உண்மை, நம்பிக்கை இல்லாது அனுப்பப் படவில்லை.
'வாக்கில் உண்மை, நல்லவர் கெட்டவர் வேறுபாடின்றி நாணயமாக நடத்தல் என்பவை இல்லாமல் எந்த நபியையும் அல்லாஹ் அனுப்ப வில்லை.' (பிஹார், பாக.2, பக்.104)
இவையனைத்தும் அல்லாஹ்வின் புனித வேதமான அல்குர்ஆனும், பெருமானாரதும் அவர்களது வழிவந்த இமாம்கள தும் வழிமுறைகளும் எடுத்துரைக்கும் முக்கிய அம்சங்களாகும். இவற்றைப் பின்பற்றுவதிலும், பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதிலும், அல்லாஹ் ஈருலக வெற்றியை நிர்ணயித்து வைத்துள்ளான்.
முடிவாக..
இச்சிறு நூலில், அஹ்லுல் பைத்துகளைப் பின்பற்றக் கூடிய ஷீயாக்கள் பற்றிய தகவல்களும், அவர்களது கொள்கைகள், நடைமுறைகள் என்பனவும் எவ்வித ஒளிவு மறைவுமின்றி மிகச் சுருக்கமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஆதாரமாக, அல்குர்ஆன் வசனங்களும் பெருமானாரதும் இமாம்களதும் ஹதீஸ்களும், முஸ்லிம் அறிஞர்களின் நூற்களும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. இத்தொகுப்பின் மூலமாக கீழ்க் காணும் பெறுபேறுகள் கிடைக்கும் என நாம் நம்புகின்றோம்.
1.முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவரும் இதனை வாசிப் பதன் மூலம் ஷீயாக்களின் உண்மையான கொள்கையை அறிந்து கொள்ள முடியும் என நம்புகின்றோம்.
2. இது, ஷீயாக்களைப் பற்றிய தெளிவான அறிவில்லாது அவர்களைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளவர்களுக்கும் ஷீயாக்களைப் பற்றிய தகவல்களை அவர்களது எதிரிகளிடமிருந்து பெற்றுக் கொண்டவர்களுக்கும் ஷீயாக்களைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்வதற்கான தெளிவான வழிகாட்டியாக அமையும் என நம்புகிறோம்.
3. அஹ்லுல்பைத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் ஏனைய மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையே காணப்படும் கருத்தொற்றுமை அவர்களிடை யேயான ஒற்றுமைக்கு மேலும் ஒரு தூண்டுகோலாக விளங்க முடியும். ஏனெனில், மத்ஹபுகள் பல இருப்பினும், அவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் சொற்பமாகவும் ஒற்றுமைகளே அதிகமாகவும் காணப் படுகின்றன.
4- அனைத்து மத்ஹபுகளைச் சேர்ந்த அறிஞர்களும் ஒன்றிணைந்து கூட்டாக ஆய்வுகளை மேற்கொண்டால், முஸ்லிம்களிடையேயுள்ள இச்சிறு வேறுபாடுகளை அகற்றிவிட முடியும். அல்லது வேறுபாடுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் முஸ்லிம்களது பிளவை நீக்கி, ஒற்றுமையை அவர்களிடையே கட்டியெழுப்பலாம். ஈரானில் ஸாஹிதான் நகரில் கடந்த காலங்களில் இத்தகைய பல முயற்சிகள் நடைபெற்றன. ஷீயா மற்றும் ஸுன்னி உலமாக்கள் தமக்கிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி ஆய்வு நடாத்தினர். அவர்களது நல்லுறவுக்கு அது பெருந்துணையாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது ரட்சகா, நமக்கும் நமக்கு முன் சென்ற ஈமானிய சகோதரர்களுக்கும் உன் மன்னிப்பை அள்ளி வழங்குவாயாக. விசுவாசிகள் பற்றி நம் மனதில் கசடு ஏற்படாமல் பாதுகாப்பாயாக. ரட்சகா, நீயோ மிக்க கருணையுள்ளோனும் இரக்கமுள்ளோனும் அல்லவா.
முற்றும்.