Back Index Next

விடயம் 631 : இஹ்தியாத்து வாஜிபின் படி மையித்துக்காக அழுகின்ற போத தங்களது சத்தத்தை மிகவும் உயர்த்தி ஓலமிட்டு அழக் கூடாது.

வஹ்ஸதுடைய தொழுகை

விடயம் 632 : மரணித்த முதலாவது இரவில் மையித்துக்காக இரண்டு ரகஅத்து வஹ்ஸதுடைய தொழுகை எனப்படும் தொழுகையை தொழுவது சுன்னதாகும். ஆதைத் தொழும் முறையாவது முதலாவது ரகஅத்தில் அல் ஹம்து சூரா ஓதிய பின் ஒருமுறை ஆயதுல் குர்ஷியையும் இரண்டாவது ரகஅத்தில் அல்ஹம்து சூரா ஓதிய பின் பத்து தடவை சூரதல் கத்ர் எனப்படும் ' இன்னா அன்ஸல்னாஹு பீ லைலதில் கதர் ' என்ற சூராவை ஓதவேண்டும். பின் ஸலாம் கொடுத்து விட்டு ' அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஆலி முஹம்மத் வப்அத் தவாபஹா இலா கப்ரி புலான் ' ( اللهم صل علي محمد وآل محمد وابعث ثوابها الي قبر فلان ) அதாவது நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தினர் மீதும் ஸலவாத் சொல்லி விட்ட யா அல்லாஹ் இந்த தவாபை இன்னாருக்கு வழங்குவாயாக என்று கூறவேண்டும். இன்னார் என்ற இடத்தில் அந்த மையித்தின் பெயரைக் கூறவேண்டும்.

விடயம் 633 : வஹ்ஸதுடைய தொழுகையை மையித் அடக்கப் பட்ட முதல் இரவின் எந்த நேரத்திலாவது தொழ முடியும். ஆனால் அதன் முதல் இரவின் இஷாத் தொழுகைக்குப் பிறகு தொழுவது சிறந்ததாகும்.

விடயம் 634: மையித்தை தூர இடத்திற்கு கொண்டு போவதற்கு விரும்பினாலோ அல்லது வேறு காரணங்களுக்காக அதை அடக்கம் செய்வதை தாமதப்படுத்தினாலோ கட்டாயம் வஹ்ஸதுடைய தொழுகையையும் அதை அடக்கம் செய்கின்ற வரைக்கும் தாமதப்படுத்த வேண்டும்.

கப்ரைத் தோண்டுதல்

விடயம் 635 : முஸ்லிமான ஒருவரது கப்ரை தோண்டுவது அதாவது அவரை அடக்கம் செய்த பிறகு அந்தக் கப்ரைத் தோண்டுவது அதில் அடக்கப் பட்டிருப்பவர் சிறு பிள்ளையாக இருந்தாலும் சரி அல்லது பையத்திய காரராக இருப்பினும் சரியே அதைத் தோண்டுவது ஹராமாகும். ஆனால் அதில் அடக்கப் பட்டிருப்பவர் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகிருந்தால் அதைத் தோண்டுவதில் பிரச்சினையில்லை.

விடயம் 636 : இமாம்களின் பரம்பரையினர் , ஷுஹதாக்கள் , உலமாக்கள் இன்னும் சாலிஹீன்களின் கப்புருகளை அவர்கள் அடக்கப்பட்டு பல ஆண்டுகள் சென்றிருந்தாரும் அதைத் தோண்டுவது ஹராமாகும்.

விடயம் 637 : இந்த இடங்களில் கப்ரைத் தோண்டுவது ஹராமில்லை.

முதலாவது: அபகரிக்கப் பட்ட இடத்தில் ஒருவரை அடக்கப்பட்டு அதன் சொந்தக் காரர் அந்த மையித்து தொடர்ந்து அங்கிருப்பதை விரும்பவில்லை என்றால்.

இரண்டாவது: கபன் அல்லது அது போன்ற மையித்துடன் சேர்த்து அடக்கபட்டிருப்பவை அபகரிக்கப்பட்டதாக இருந்தால் அதன் சொந்தக்காரர் அது தொடர்ந்தும் கப்ருக்குல் இருப்பதை விரும்பாதிருந்தால். மேலும் மையித்திலிருந்து அதன் சொந்தக்காரருக்கு அனந்தரமாக கிடைத்த சொத்தும் மையித்துடன் சேர்த்து அடக்கப்பட்டிருந்தால் அது தொடர்ந்து கப்ருக்குல் இருப்பதை அதன் தற்போதைய உரிமையாளர் விரும்பாதிருந்தால். ஆனால் அவர் மரணிப்பதற்கு முதல் துஆ , குர்ஆன் அல்லது மோதிரம் போன்றதை அவருடன் சேர்த்து அடக்க வேண்டும் என்றிருந்தால் அது அவரின் சொத்தில் மூன்றில் ஒன்றுக்கு அதிகமானதாக இல்லாதிருந்தால் அதை எடுப்பதற்காக அந்தக் கப்ரை தோண்ட முடியாது.

மூன்றாவது: மையித்து குளிப்பாட்டாது , பகனிடாது அடக்கப்பட்டிருந்தால் அல்லது குளிப்பாட்டிய பின்னர் தான் அடக்கப்பட்டது ஆனால் அது அக்குளிப்பு பாத்திலானவை என அறிந்தால் அல்லது உரிய முறையில் , இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு ஏற்றதாகா அல்லாது கபனிடப்பட்டிருந்தால் அல்லது கப்ரில் அதை கிப்லாவை முன்னோக்கி வைக்காதிருந்திருந்தால் இந்நிலையில் அதைத் தோண்டுவது அதன் கண்ணியத்தைக் குறைக்கும் படியாக இருந்தால் அதாவது அது வாசம் எடுத்து சீர் குழைந்திருந்தால் அதைத் தோண்ட முடியாது. ஆனால் மையித்தை தொழுவிக்காது அடக்கம் செய்திருந்தால் அதை தோண்ட முடியாது மாறதக அதன் கப்ரடியில் நின்று அதற்காக வேண்டி தொழவேண்டும்.

நாலாவது: உண்மையை நிருபிப்பதற்காக வேண்டி மையித்தின் உடலை பார்வையிட வேண்டமாயிருப்பின்.

ஐந்தாவது: ஒரு மையித்தை இழிவு படுத்தும் இடத்தில் அடக்கப்பட்டிருத்தல். உதாரணமாக காபிர்களின் மையவாடிகளில் அடக்கப்பட்டிருப்பது போல். அல்லது குப்பை கூழங்கள் கொட்டும் இடத்தில் அடக்கப்பட்டிருத்தல்.

ஆறாவது: கப்ரை தோண்டுவதை விட மிகவும் முக்கியமானதொரு மார்க்க விடயத்திற்காக அதைத் தோண்ட முடியும். அதாவது கற்பினிப் பெண் அவளது வயிற்றுக்குல் இருக்கும் பிள்ளை உயிருடன் இருந்த நிலையில் மரணித்து  அவளை அதேநிலையில் அடக்கபட்டிருந்தால் அதை எடுப்பதற்காக அதைத் தோண்டுதல்.

ஏழாவது: மையித்தின் உடலை மிருகம் கிழித்து விடும் அல்லது வெள்ளம் கொண்டு சென்று விடும் அல்லது எதிரிகள் அதை வெளியில் எடுத்து விடுவார்கள் என்று பயந்தால்.

எட்டாவது: மையித்தின் உடம்பின் ஒருபகுதியை அடக்கம் செய்யாதிருந்து அதை அதனுடன் அடக்கம் செய்ய விரும்பினால். ஆனால் இஹ்தியாத்து வாஜிபின் படி அதை மையித்தின் உடல் தெரியாத அளவு கப்ரில் வைக்கவேண்டும். அதாவது இதை வைப்பதற்காக கப்ரின் அடிப்பகுதி வரை தோண்ட வேண்டும் என்பதல்ல மாறாக ஓரளவு தோண்டி வைக்க வேண்டும்.

ஒன்பதாவது: ஒருவர் மரணிப்பதற்கு முன் அவர் மரணித்தால் அவரை அடக்கம் செய்வதற்கு முதல் இந்த புனிதஸ்தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென வஸிய்யத் செய்திருந்தால் வேண்டுமென்று அல்லது வேறு காரணங்களுக்காக அவரது வஸிய்யத் பிரகாரம் செய்யாது அடக்கப்பட்டிருந்தால் அவரது கப்ரைத் தோண்டி அவர் வஸிய்யத் செய்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அவரது உடல் கெட்டுப்போயிருந்தாலே தவிர. இந்நிலையில் அவர் வஸிய்யத் செய்த பிரகாரம் அவரைக் கொண்டு செல்ல முடியாது. இது அவரது வஸிய்யத்திற்கு மாற்றமாக இருப்பினும் சரியே!

சுன்னத்தான குளிப்புகள்.

விடயம் 638 : இஸ்லாமிய ஷரீஆ சட்டத்திலே சுன்னத்தான குளிப்புகள் கூடுதலாக வந்துள்ளது. அவைகளில் சில:

1 . ஜும்ஆவுடைய குளிப்பு: சுப்ஹு தொழுகையில் இருந்து ளுஹர் வரையும் அதன் நேரமாகும். அதை  ளுஹருக்கு சற்று முன்னர் நிறைவேற்றுவது சிறந்தாகும். ளுஹர் வரைக்கும் குளிக்கவில்லை என்றிருந்தால் ஜும்ஆவின் அஸர் வரைக்கும் அதா கழா என்ற நிய்யத்து இல்லாது அதை நிறைவேற்ற வேண்டும். இன்னும் பொதுவாக ஜும்ஆவுடைய நாளில் குளிக்க வில்லையென்றிருந்தால் சனிக்கிழமை காலையில் இருந்து மாலையாவதற்குல் கழாவுடைய நிய்யத்தைக் கொண்டு குளிக்க வேண்டும். இஹ்தியாத்து வாஜிபின் படி அதன் கழாவை சனிக்கிழமை இரவு நிறைவேற்றுதல் சஹீஹ் இல்லை. வெள்ளிக் கிழமை குளிப்பதற்கு நீர் கிடைக்காது என அஞ்சும் ஒருவர் வியாழக்கிழமை குளிக்க முடியும். ஒருவர் ஜும்ஆவுக்கு குளிக்கும் போது இதைச் சொல்வது சுன்னத்தாகும்.

اَشْهَدُ اَنْ لا اِلهَ اِلاّ الله وَحْدَهُ لا شَريكَ لَهُ وَاَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ اللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّد وَآلِ مُحَمَّد وَاجْعَلْنِى مِنَ التّوّابينَ وَاجْعَلْنِى مِنَ الْمُتَطَهِّرينَ.

2.ரமழான் மாதத்தில் முதல் இரவில் குளித்தல் இன்னும் அனைத்து ஒற்றையான இரவுகளிலும் உதாரணமாக 3 ,5 ,7... போன்ற இரவுகள். மேலும் 21 வது இரவில் இருந்து ரமழானின் கடைசி வரைக்குள்ள இரவுகளில் குளிப்பது முஸ்தஹப்பாகும். 1 , 15 , 17 , 19 , 20 , 23 , 25 , 27 , 29 இருவுகளில் குளிப்பதை மிகவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ரமழான் மாதத்தின் முழு இரவிலும் குளிக்கவும் முடியும். ஆனால் அதை சூரியன் மறைவதற்கு சற்று நேரத்திற்கு முன் நிறைவேற்றுவது சிறந்ததாகும்.  ஆனால் நோன்பு 21  தொடக்கம் கடைசி வரைக்கும் மஃரிபுக்கும் இஷாவுக்கும் இடையில் குளிக்க வேண்டும். அத்துடன் ரமழான் 23 வது இரவில் அதன் முதல் பகுதியில் நிறைவேற்றிய குளிப்பைத் தவிர அந்த இரவின் கடைசிப் பகுதியிலும் மற்றொரு முறை குளிப்பது முஸ்தஹப்பாகும்.

3 .நோன்புப் பெருநாள் , ஹஜ்ஜுப் பெருநாள் நாளில் குளித்தல். சுபஹில் இருந்து சூரியன் மறையும் வரை அதன் நேரமாகும். ஆனால் பெருநாள் தொழுகைக்கு முதல் குளிப்பது சிறந்ததாகும்.

4 .நோன்புப் பெருநாளுடைய இரவில் குளித்தல். மஃரிபின் ஆரம்பத்திலிருந்து சுபஹுடைய அதான் வரைக்கும் அதன் நேரமாகும். ஆனால் அதை இரவின் ஆரம்பத்தில் நிறைவேற்றுவது சிறந்ததாகும்.

5 .துல்ஹஜ் மாதம் 8 ,9 ஆம் நாளளில் குளித்தல். 9 வது நாளில் அதை ளுஹர் நேரத்திற்கு சற்று முன்னர் நிறைவேற்றுவது சிறந்ததாகும்.

6 .ரஜப் மாத்தின் 1 , 1 5 , 27 , அதன் கடைசி நாளில் குளித்தல்.

7.ஈதுல் கதீருடைய நாளில் குளித்தல். அதை ளுஹருக்கு முன்னர் நிறைவேற்றுவது சிறந்ததாகும்.

8. துல்ஹஜ் மாதம் 24 வது நாளில் குளித்தல்.

9. புதுவருடத்தில் , ஷஃபான் மாதம் 1 5வது நாள் , ரபீஉல் அவ்வல் மாதம் 9 , 1 7 வது நாட்களில் , துல்கஃதா மாதம் 25 வது நாளில் நன்மையைப் பெறுவோம் என்ற நிய்யத்தில் குளிக்க வேண்டும்.

10 .பிறந்தவுடன் பிள்ளையைக் குளிப்பாட்டுதல்.

11 .கணவன் அல்லாதவனுக்காக வாசம் , மணம் பூசிய பெண்ணின் குளிப்பு.

12 .மஸ்துடைய நிலையில் தூங்கியவர் குளித்தல்.

13 .உடம்பில் ஒரு பகுதி குளிப்பாட்டி மையித்தின் உடம்பில் ஒரு பகுதியில் பட்டவர் குளித்தல்.

14 .சூரிய , சந்திர கிரகணம் பிடித்த போது ஆயாதுடைய தொழுகையை வேண்டுமென்று தொழாதவர் குளித்தல்.

15 .தூக்கிலிட்டவனை பார்ப்பதற்கு போய் அதைப் பார்த்தவர் குளித்தல். ஆனால் எதிர் பாராதவிதமாக அல்லது பார்க்குமாறு நிர்ப்பந்திக்கட்டு அதைப் பார்த்தால் அல்லது சாட்சி சொல்லுதல் போன்றதற்காக போயிருந்தால் , இது போன்றதற்காக குளிப்பது முஸ்தஹப்பு இல்லை.

விடயம் 639 : மக்காவிலுள்ள ஹரத்திற்குல் , மக்கா நகரத்திற்குல் , மஸ்ஜிதுல் ஹராமுக்குல் , கஃபாவுக்குல் , மதினா நகரத்திற்குல் , மஸ்ஜிதுன் நபியிக்குல் , இமாம்களின் ஹரம்களுக்குல் நுழைவதற்கு முதல் மனிதன் குளித்துக் கொள்வது முஸ்தஹப்பாகும். ஒருநாள் பல தடவைகள் அதற்குல் நுழைந்தால் ஒருதரம் குளித்துக் கொண்டால் போதுமாகும். இன்னும் ஒருவர் ஒரேநாளில் மக்கா ஹரத்தினுல்லும் , மஸ்ஜிதுல் ஹராமுக்கும் கஃபாவுக்கும் போக விரும்பினால் அவை அனைத்தையும் நினைத்து ஒருதரம் குளித்தால் போதுமாகும். அதேபோன்று தான் ஒருநாளில் மதினா ஹரத்திற்கும் , மதினா நகருக்கும் , மஸ்ஜிதுன் நபியிக்கும் போக விரும்பினால் அவை அனைத்தையும் நினைத்து ஒரு தரம் குளித்துக் கொண்டாலும் போதுமாகும். நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களினதும் இமாம்களினதும் கப்ருகளை அன்மையில் இருந்து அல்லது தொலைவில் இருந்து சியாரத் செய்வதற்கும் , அல்லாஹ்விடம் தேவைகளைக் கேற்பதற்கும் அதேபோல் பாவமன்னிக்கேட்பதற்கும் வணக்கத்தில் சுறுசுறுப்பு ஏற்படுவதற்கும் பிரயாணம் செல்வதற்கும் குறிப்பாக இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சியாரத் செய்ய போவதற்கும் குளித்துக் கொள்வது முஸ்தஹப்பாகும். மேலே கூறப்பட்ட விடயங்களில் ஒன்றுக்காக குளித்து பின்னர் வுழுவை முறிக்கக் கூடியவை அவருக்கு நிகழ்ந்தால் உதாரணமாக தூங்குதல் போன்றவை , அவரது குளிப்பு பாத்திலாகி வடும். மீண்டும் அவர் இரண்டாவது தடவையாக குளிப்பது முஸ்தஹப்பாகும்.

விடயம் 640 : ஒருவர் முஸ்தஹப்பாக குளிப்பைக் கொண்டு தொழுகை போன்ற வுழு அவசியமாக இருக்கும் வேலைகளைச் செய்ய முடியாது.

விடயம் 641 : ஒருவர் மீது பல முஸ்தஹப்பான குளிக்புகள் இருந்தால் அவர் அவை அனைத்தையும் நினைத்து ஒரு தடவை குளித்தால் போதுமாகும். அதேபோல் பல வாஜிபான குளிப்புகளும் பல முஸ்தஹப்பான குளிப்புகளும் ஒருவருக்கு இருந்தால் அவை அனைத்தையும் நினைத்து ஒரு தடவை குளித்தால் போதுமாகும். ஒருவர் மீது பல வாஜிபான குளிப்புகள் இருந்து அவர் அவைகளை மறந்து அதில் ஒன்றை மாத்திதம் நினைத்துக் குளித்தால் அது மற்ற குளிப்புகளுக்கும் போதுமாகும். அதாவது மீண்டும் அவர் அவை அனைத்தையும் நினைத்து குளிக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் வாஜிபான குளிப்பை நிறைவேற்றினால் பின் தொழுவதற்காக வுழுச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் இஸ்திஹாழா முதவஸ்ஸிதாவுடைய குளிப்பைத் தவிர. (இது பற்றி விரிவாக இஸ்திஹாழாவுடைய சட்டங்கள் என்ற பகுதியில் கூறப்பட்டு விட்டது)

தயம்மும்

ஏழு சந்தர்ப்பங்களில் வுழுக்கு , குளிப்புக்கு பதிலாக தயம்மும் செய்யப்படும்.

தயம்மும் செய்யும் சந்தர்ப்பங்கள்

முதலாவது சந்தர்ப்பம்

வுழு அல்லது குளிப்பதற்கு போதுமான நீர் இல்லாதிருத்தல்.

விடயம் 642 : கிராம புரங்களில் வாழும் ஒருவர் தயம்மும் செய்யும் நிலமை ஏற்பட்டால் அவர் தண்ணீர் இனி கிடைக்க மாட்டாது என நம்பிக்கை ஏற்படும் வரைக்கும் அதைத் தேடவேண்டும். அவர் பாலை வனத்தில் இருந்தால் அப்பூமி மேடு பள்ளமாக இருந்தால் அல்லது மரங்கள் போன்றதால் (அடர்ந்த காடாக இருக்கின்ற காரணத்தால்) அதில் நடப்பது கஷ்டமாக இருந்தால் ஒவ்வொரு திசையிலும் வில்லிருந்து எய்யப்படும் ஒரு அம்பு போய் விழும் தூரத்திற்கு சென்று தண்ணீர் உள்ளதா என பார்க்க வேண்டும். அப்பூமி இவ்வாறு இல்லாதிருந்தால் இரண்டு அம்பு போய் வழும் தூரத்திற்கு போய் தண்ணீர் தேட வேண்டும்.

விடயம் 643 : நாங்கு திசைகளும் சமமாக இல்லாது சிலது மேடாகவும் பள்ளமாகவும் அதில் நடப்பது கஷ்டமானதாகவும் இருந்து மற்றது சமதரையாகவும் இருந்தால் , சமதரையாக இருக்கின்ற பகுதியில் இரண்டு அம்புகள் எய்யப்பட்டு போய் விழும் தூரம் வரைக்கும் போய் தண்ணீர் தேட வேண்டும். கஷ்டமான திசையில் ஒரு அம்பு விழும் தூரத்திற்கு போய் பார்க்க வேண்டும்.

விடயம் 644 : தண்ணீர் இல்லை என்று உறுதி இருக்கின்ற பக்கம் தண்ணீர் தேடிப் போக வேண்டிய அவசியமில்லை.

விடயம் 645 : தொழுகையின் நேரம் மிகவும் சுருக்கமாக இல்லாத தண்ணீர் தேடுவதற்கு நேரம் இருக்கின்ற ஒருவர் தண்ணீர் தேடிச் செல்ல வேண்டும் என்ற தூரத்தை விட சற்று தூரம் சென்றால் தண்ணீர் கிடைக்கும் என்ற உறுதி அவருக்கு இருந்தால் செல்விதல் தடை , கஷ்டம் இல்லாதிருந்தால் கட்டாயம் அதைப் பெற செல்ல வேண்டும். மாறாக சிலவேலை அங்கே கிடைக்கும் என்ற நினைப்பு இருந்தால் செல்ல அங்கே செல்வது அவசியமில்லை.